2011-08-10 15:22:38

இங்கிலாந்தில் வெடித்துள்ள வன்முறைகள் குறித்து பேராயர் நிக்கோல்ஸின் கவலையும், கண்டனமும்


ஆக.10,2011. சமுதாயம் கடைபிடிக்க வேண்டிய பல ஒழுங்கு முறைகள் இவ்வளவு எளிதாக மீறப்படுவதும், சீரழிக்கப்படுவதும் மிகந்த வருத்தத்தையும், கவலையையும் தருகிறது என்றும், இந்த வன்முறைகள் கண்டனத்திற்குரியன என்றும் இங்கிலாந்தின் Westminster உயர்மறைமாவட்டப் பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
கடந்த சில நாட்களாக இங்கிலாந்தின் பல நகரங்களில் வெடித்துள்ள வன்முறைகள் குறித்து தன் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்ட பேராயர் நிக்கோல்ஸ், இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்கு சிறப்பான வகையில் செபிக்குமாறு அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இக்கலவரங்கள் விரைவில் தீரும்படியாக அனைத்து மதத்தினரும் இணைந்து இத்திங்கள் இரவு வடலண்டன் பகுதியில் Tottenham என்ற இடத்தில் உள்ள புனித மரியா ஆலயத்தில் இரண்டு மணி நேரம் திருவிழிப்புச் செப வழிபாட்டை மேற்கொண்டனர்.
அருளாளரான கர்தினால் ஜான் ஹென்றி நியூமன் பரிந்துரையை நாடி, கலவரங்கள் ஓய்வதற்குச் செபிக்கும்படி Birmingham உயர்மறைமாவட்டம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வியாழன், ஆகஸ்ட் 11ம் நாள், அருளாளர் நியூமன் இறையடி சேர்ந்த நாள் என்பதை நினைவுறுத்தி, இவ்வுயர் மறைமாவட்டம் இவ்வழைப்பை விடுத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.