2011-08-10 15:24:04

ஆகஸ்ட் 11, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


எனிட் பிளைட்டன், பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாக ஆகஸ்ட் 11, 1897ல் பிறந்தார். எனிட் பிளைட்டனுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு சிறுவர் பத்திரிகையில் இவரின் முதல் படைப்பு பிரசுரமானது. 1921 அளவில் இவரின் கவிதைகளும் கதைகளும் அதிகமாகப் பிரசுரமாகத் தொடங்கின. 1922 அளவில் தன்னை முழுமையாகக் கதைகள் புனைவதில் ஈடுபடுத்திக் கொண்டார். அன்றிலிருந்து 1964 வரை சுமார் 600 சிறுவர் புத்தகங்களை எழுதியதுடன் பல்வேறுபட்ட பத்திரிகைகளில் பல ஆக்கங்களைப் படைத்தார். Famous Five, Secret Seven, Little Noddy series போன்ற புத்தகங்கள் இவருக்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. இவரின் எழுத்துக்கள் பெருமளவில் இளம் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இவரின் புத்தகங்கள் 20 ம் நூற்றாண்டில் பல தடவை மறுபிரசுரமாயின.
எனிட் பிளைட்டனின் கதைகள் பொதுவாக மர்மக் கதைகளாகவோ அல்லது வீரதீரக் கதைகளாகவோ காணப்பட்டன. இவர் பயன்படுத்திய சொற்களஞ்சியத்தின் காரணமாக ஆரம்பப் படிநிலை ஆங்கில மாணவர்கள்கூட இக்கதைகளை வாசிக்கக் கூடியதாக இருந்தது. கதைகளில் நல்ல மற்றும் கூடாத பாத்திரங்கள் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவதுடன் நன்னெறிகளைக் கற்பிப்பனவாகவும் உள்ளன.
இவர் லண்டனின் “ஹம்ப்ஸ்டெட்” எனும் ஊரில் 1968ம் ஆண்டு நவம்பர் 28ம் நாளில் மரணமடைந்தார்.








All the contents on this site are copyrighted ©.