2011-08-09 16:39:05

விவிலியத் தேடல் திருப்பாடல்கள் 65, 66, 67


RealAudioMP3
"சாதாரண, எளியதோர் வெள்ளைத் தாளில் புகழ்பெற்ற கவிஞரின் எண்ணங்கள் கவிதையாகப் பதிந்ததும், அந்தத் தாள் அதிக மதிப்புடையதாகிவிடும். ஒரு சிறு தாளில் (காசோலையில்) பெரும் செல்வந்தர் ஒருவர் தன் கையொப்பமிட்டால், அந்தத் தாள் பல கோடி ரூபாய் மதிப்புடையதாகிவிடும். 50 ரூபாய் மதிப்புடைய ஒரு துணியில் தையல் கலையில் வல்ல ஒருவர் கைபட்டால், 500 ரூபாய் மதிப்புடைய ஒரு ஆடையாக மாறிவிடும். அர்த்தமற்ற, அழுக்கான ஒரு வாழ்வு இறைவனின் கைபட்டால் பலருக்கும் பயன் தரும் ஒரு புனித வாழ்வாக மாறும். அதுதான் மீட்பு."
Lou Nicholes என்ற மறைபணியாளர் சொன்ன வார்த்தைகள் இவை.
முன்பு ஒரு முறை நான் எழுதிய பக்திப் பாடல் ஒன்றின் இரு வரிகள் என் நினைவுக்கு வருகின்றன:
"அருள்மகன் உன் கரம் தொடுகையிலே
துரும்பிலும் புதுமைகள் வெளியாகும்."
துரும்பாக, தூசியாக இருக்கும் மனித வாழ்வு, இறைவனின் கரம்பட்டால் இரும்பாக உறுதிபெறும், கரும்பாக இனிமை பெறும். வாழ்வில் இவ்வகை மாற்றங்கள் உருவாகும்போது, நம் மனதில் மேலோங்கி எழும் உணர்வு... நன்றி. இந்த நன்றி உணர்வு செபமாக, பாடலாக வெளிவரும். நன்றி உணர்வில் தோய்த்து எடுக்கப்பட்ட திருப்பாடல்கள் பல உள்ளன. இவற்றில், 65, 66, 67 ஆகிய மூன்று திருப்பாடல்களும் நன்றி புகழ்ப்பா என்ற தலைப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருப்பது என் கவனத்தை அதிகம் ஈர்த்தது. இன்றைய விவிலியத் தேடலில் இம்மூன்று திருப்பாடல்களை நாம் இணைத்துச் சிந்திப்போம்.
மனித மனங்களில் எப்போது நன்றி உணர்வு உருவாகும்? எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம். நன்றி உணர்வு உருவாக காரணம், காரியம் எல்லாம் தேவையில்லை. அழகியதோர் மலர், மழலையின் சிரிப்பு, பிரமிக்க வைக்கும் ஓர் இயற்கை காட்சி என்று ஆரம்பித்து, வாழ்வில் நிகழும் பல அற்புதமான நன்மைகளுக்கு நாம் நன்றி சொல்கிறோம்.
65ம் திருப்பாடலின் முதல் 8 திருவசனங்களில் ஆசிரியர் இறைவனைப் புகழ்வதற்கும், நன்றி பகர்வதற்கும் காரணங்களை வரிசைப்படுத்துகிறார்:
இறைவன் மன்றாட்டுக்களைக் கேட்கிறவர்;
பாவத்தின் பாரங்களை, குற்றப் பழிகளைப் போக்குகின்றவர்;
தன் மக்களைத் தன்னருகிலேயே வைத்துக் காப்பவர்;
மன்றாட்டுக்களுக்கு நீதியாக மறுமொழி பகர்பவர்;
வாழ்வோர் அனைவரின் நம்பிக்கை இறைவனே...
என்று பல காரணங்களை ஆசிரியர் வரிசைப்படுத்துகிறார்.

நன்றி என்ற சொல்லில், அந்த உணர்வில் பல அழகான எண்ணங்கள் பொதிந்துள்ளன. ஒரு சிலவற்றை இத்திருப்பாடல்களின் உதவியுடன் சிந்திப்போம். முதல் எண்ணம்... நன்றி என்பது நல்லவைகள் நடக்கும்போது மனதில் உருவாகும் ஓர் உணர்வு. ஒரு சில வேளைகளில் தீமை போல வரும் சில பிரச்சனைகளும் பின்னர் நன்மையாய் மாறும்போது, நாம் நன்றி உணர்வு கொள்கிறோம்.
66ம் திருப்பாடலில் 11, 12 ஆகிய திருவசனங்களில் ஆசிரியர் கூறும் வரிகள் நன்றி உணர்வை உருவாக்கும் வார்த்தைகளாகத் தெரியவில்லை. இந்த வரிகளை மட்டும் நாம் தனித்துப் பார்த்தால், இவை நன்றிப் பாடலில் இடம்பெற முடியாத வரிகளாகத் தெரிகின்றன. கடவுளை குறைச் சொல்லும் வரிகளாக ஒலிக்கின்றன. இதோ அவ்வரிகள்:
கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்: பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்: நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்.
ஆனால், மனிதர்கள் நம் தலைமீது நடந்து செல்லுமளவு துன்பத்தில் நாம் புதைந்திருந்தாலும், அத்துன்பங்களை மாற்றுக் கண்ணோட்டத்தோடு எவ்விதம் நோக்க முடியும் என்பதை ஆசிரியர் சொல்லித் தருகிறார். இவ்விரு திருவசனங்களின் துவக்கத்திலும், இறுதியிலும் கூறப்பட்டுள்ள ஒரு சில அற்புதமான வார்த்தைகளுடன் இவ்வரிகளை மீண்டும் ஒரு முறை கேட்போம்:
கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்: கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்: பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்: நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்: ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர். (66: 10-13)
துன்பங்களை இவ்வழியில் நோக்கும் பக்குவத்தை திருப்பாடலின் ஆசிரியரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி என்பதை வார்த்தைகளில் நாம் சொல்லாத நேரங்களே அதிகம் என்பது நன்றியைக் குறித்த இரண்டாவது எண்ணம்... நன்றி என்ற வார்த்தையை இந்த மூன்று திருப்பாடல்களிலும் ஓரு முறைகூட ஆசிரியர் பயன்படுத்தவில்லை. இறைவன் தனக்கும், தன் மக்களுக்கும் இவைகளைச் செய்தார், செய்கிறார், இனியும் செய்வார் என்று ஆசிரியர் கூறும் ஒவ்வோர் கூற்றும் அவர் உள்ளம் நன்றியால் நிறைந்திருப்பதை நமக்குத் தெளிவாக்குகிறது. வாய் வார்த்தையாய் சொன்னால்தான் நன்றியா? வேறு எத்தனையோ வகைகளில் நம் நன்றியை வெளிப்படுத்தலாமே!
குழந்தைப் பருவத்திலிருந்து நமக்குச் சொல்லித் தரப்படும் ஒரு முக்கியப் பாடம் நமக்கு யாராவது எதையாவது கொடுத்தால், உடனே 'நன்றி' சொல்ல வேண்டும் என்ற பாடம். குழந்தையொன்று பேச ஆரம்பித்ததும், அதற்கு முதலில் சொல்லித் தரப்படும் வார்த்தைகள் 'அம்மா, அப்பா'. அதற்கு அடுத்தபடியாக நாம் சொல்லித்தரும் வார்த்தைகள்: Thank you, Thanks Auntie, Thanks Uncle என்ற வார்த்தைகள். ஒரு குழந்தைக்கு ஒரு பொருளை நாம் கொடுத்ததும், அக்குழந்தை பெற்றோரின் தூண்டுதல் ஏதுமின்றி, தானாகவே சிரித்த முகத்துடன் நன்றி சொன்னால், அக்குழந்தை நல்ல முறையில் வளர்க்கப்பட்டுள்ளதென்று நாம் பெருமைப்படுகிறோம்.
ஆனால், வீட்டில் இந்தக் காட்சி கொஞ்சம் மாறும். குழந்தைக்கு அன்னை உணவூட்டி விடுகிறார். ஒவ்வொரு வாய் உணவைப் பெற்றதும், அக்குழந்தை நன்றி சொன்னால் அது செயற்கையாய் இருக்கும். அதற்குப் பதில், ஊட்டப்படும் உணவை அக்குழந்தை இரசித்து உண்பதே அம்மாவுக்கு அக்குழந்தை சொல்லாமல் சொல்லும் நன்றி. சாப்பிட்டு முடித்ததும், இறுதியில் அம்மாவுக்கு ஒரு முத்தம் கொடுத்தால் அதுவும் நன்றி சொல்லும் ஒரு வகை.
அப்பா வாங்கித் தந்த ஓர் அழகான உடையைக் கண்டதும், குழந்தை ஓடிச் சென்று அப்பாவை அணைத்து முத்தமிடுகிறது. பின்னர் அந்த உடையை அணிந்து கொண்டு வெளியில் ஓடிச் சென்று தன் நண்பர்களுக்கு அதைக் காட்டி, மூச்சுக்கு மூச்சு 'என் அப்பா வாங்கித் தந்தார்' என்று குழந்தை பறை சாற்றுகிறது. இச்சம்பவங்களில் நன்றி என்ற வார்த்தையைக் குழந்தை நேரடியாகச் சொல்லவில்லை. ஆனால், குழந்தையின் நன்றியுணர்வு அதன் செயல்களில் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. நம் ஒவ்வொருவரது குடும்பங்களிலும் இதுபோல் ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடைபெறுகின்றன. குடும்பத்திலும், நண்பர்கள் மத்தியிலும் 'நன்றி நவிலல்' என்று ஒரு சடங்கோ, சம்பிரதாயமோ இல்லாமல் நன்றி உணர்வுகள் பரிமாறப்படுகின்றன.
இந்தக் கண்ணோட்டத்தில் நாம் இத்திருப்பாடல்களை நோக்கும்போது, தனக்கும், தன் மக்களுக்கும் இறைவன் செய்த நன்மைகளை ஆசிரியர் ஒவ்வொன்றாகச் சொல்லும்போதே அவரது நன்றியையும் சேர்த்து சொல்கிறார்.

இவைபோன்ற அழகிய பல அம்சங்களைக் கொண்ட நன்றி உணர்வால் நம் உள்ளம் அடிக்கடி நிறையும்போது, வாழ்வின் சிறு, சிறு காரியங்களும் அழகாக மாறும்; இந்த உலகமே அழகாக மாறும்... நன்றியால் நிறைந்திருக்கும் திருப்பாடல் ஆசிரியரின் உள்ளத்தில் இவ்வுலகம் மிக அழகாகத் தோன்றுவதை அவர் 65 ம் திருப்பாடலின் இறுதியில் கவிதை நயத்துடன் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையில் நாம் காணும் அழகெல்லாம் இறைவனின் கைவண்ணம் என்பதை அழகாகக் கூறியுள்ளார். இவ்வரிகளுடன் இன்றைய நம் தேடலை நாம் நிறைவு செய்வோம்.
திருப்பாடல் 65 9-13
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது... அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்: அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்: உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன: குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன: பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன. அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!








All the contents on this site are copyrighted ©.