2011-08-09 15:21:04

சொமாலியாவிற்கு 31 டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது ஐ.நா


ஆக.09,2011. சொமாலியாவில் துன்புறும் மக்களுக்கு உதவுவதற்கென 31 டன் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியுள்ளது ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு.
சொமாலியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறத்தாழ பாதிப்பேர், அதாவது 32 இலட்சம் பேர் வறட்சியால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உறைவிடங்களுக்கான பிளாஸ்டிக் விரிப்புகள், போர்வைகள் மற்றும் பாய்களைக் கொணர்ந்துள்ளது இந்த ஐநா அமைப்பு.
வழக்கமாக தரை வழியாகவோ அல்லது கடல் வழியாகவோ உதவிப்பொருட்களை எடுத்துச்செல்லும் இவ்வமைப்பு, தற்போது அவசரநிலை நடவடிக்கையாக விமான மூலம் அவைகளைக் கொண்டுச் சென்றுள்ளது.
சொமாலியாவில் 30 விழுக்காட்டுக் குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் வாடும் அதே வேளை, 10,000க்கு நான்கு குழந்தைகள் என ஒவ்வொரு நாளும் உயிரிழந்து வருகின்றன.
ஆப்ரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் கென்யா, எத்தியோப்பியா, டிஜிபுத்தி மற்றும் சொமாலியாவில் 1கோடியே 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளில் இத்தகைய ஒரு வறட்சி அப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.