2011-08-08 15:57:09

சிரியாவிலும் லிபியாவிலும் ஒப்புரவும் அமைதியும் ஏற்பட திருத்தந்தை அழைப்பு


ஆக.08,2011. சிரியாவில் அதிகரித்து வரும் கடும் வன்முறைகள் பல உயிரிழப்புக்களையும் பெரும் துன்பங்களையும் ஏற்படுத்தி வரும்வேளை இந்நிலை குறித்துத் தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகக் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வாறு அழைப்பு விடுத்தத் திருத்தந்தை, சிரிய நாட்டு அரசும் மக்களும் அந்நாட்டில் எவ்வளவு விரைவில் அமைதியைக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவில் அதனை மீண்டும் கொண்டுவருமாறும், சிரிய அரசு, அந்நாட்டுக் குடிமக்களின் நியாயமான ஏக்கங்களை மதித்து நடக்குமாறும் வலியுறுத்தினார்.
அத்துடன், ஆயுதங்களைப் பயன்படுத்திப் பிரச்சனைகளுக்குத் தீர்வைக் காண முடியாத லிபியாவிலும் செயல்திறமிக்கப் பேச்சு வார்த்தைகள் மூலம் அமைதிக்கானத் தீர்வைக் காணுமாறு, சர்வதேச நிறுவனங்களையும் அரசியல் மற்றும் இராணுவத்திற்குப் பொறுப்பானவர்களையும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
டுனிசியாவிலும் எகிப்திலும் இடம் பெற்ற “ஜாஸ்மின் எழுச்சியை”த் தொடர்ந்து கடந்த மார்ச் பாதியில் சிரியாவில் தொடங்கிய மக்கள் எழுச்சியில் இதுவரை 1650க்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லிபியாவில் கடந்த பிப்ரவரியிலிருந்து உள்நாட்டுக் கலவரம் இடம் பெற்று வருகிறது. பென்காசியிலுள்ள புரட்சியாளர்கள் நேட்டோ அமைப்பின் போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உதவியுடன் அதிபர் கடாஃபிக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.