2011-08-08 15:56:14

1. வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது இறைவனில் நம்பிக்கை வைத்து வாழத் திருத்தந்தை அழைப்பு


ஆக.08,2011. இவ்வுலக வாழ்க்கையின் நெருக்கடிகளின் போது தங்களது நம்பிக்கையை இறைவனில் வைத்து வாழுமாறு இயேசு தமது சீடர்களுக்குக் கற்பிக்க விரும்புகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் கூறினார்.
காஸ்தல் கந்தோல்ஃபோவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்ல வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை அடிப்படையாக வைத்துப் பேசினார்.
கடல், இன்றைய மனித வாழ்க்கையையும் இவ்வுலகின் உறுதியற்ற தன்மையையும் புயல், மனிதனை நசுக்கும் பல துன்பங்களையும் குறித்து நிற்கின்றன, அதேவேளை, படகு, கிறிஸ்துவின் மீது கட்டப்பட்டு திருத்தூதர்களால் வழிநடத்தப்பட்ட திருச்சபையையும் குறித்து நிற்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இந்நற்செய்திப் பகுதிக்குப் புனித அகுஸ்தீன் அளித்த விளக்கத்தையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, புனித பேதுருவை இயேசு காப்பாற்ற முனைந்த போது இயேசு தம்மைத் தாழ்த்தித் தமது கரங்களால் பேதுருவைத் தூக்கி விட்டார் என்றும், நாம் நமது சொந்த வல்லமையால் நிமிர்ந்து நிற்க முடியாது என்றும் உரைத்தார்.
இறைவன் நம் அருகில் எப்போதும் இருக்கிறார், நாம் அவரில் முழு நம்பிக்கை வைக்க வேண்டுமென்று நமக்காக அவர் காத்திருக்கிறார் என்றும் திருத்தந்தை எடுத்துக் கூறினார்.
இறைவனில் முழுநம்பிக்கை வைத்து வாழ்ந்த அன்னைமரியை நம் வாழ்க்கையின் எடுத்துக்காட்டாகக் கொள்வோம், “நான்தான், துணிவோடிருங்கள் பயப்படாதீர்கள்”, என்ற இயேசுவின் வார்த்தைகளை நம் வாழ்க்கையின் துயரங்களின் போது நினைவுகூருவோம் என்று சொல்லி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.