2011-08-06 14:59:28

தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 விழுக்காடாகக் குறைவு


ஆக.06,2011. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம், கடந்த 5 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பான யுனிசெப் அறிவிக்கிறது.
யுனிசெப் நிறுவனம் கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில், 40 விழுக்காட்டுப் பெண்களே 6 மாதங்கள் வரை, தாய்ப்பால் கொடுக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.
ஆகஸ்ட் முதல் வாரத்தை தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாக ஐ.நா. கடைபிடித்து வருவதையொட்டி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட யுனிசெப், ஆறு மாதங்கள்வரை துணை உணவு இல்லாமல், தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை 20 விழுக்காடுதான் என்று கூறியது.
"பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் சிறந்த மருந்து; தாய்ப் பால் கொடுப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மேம்படுகிறது. இதனால், பிறந்த ஒரு மணி நேரத்துக்குள், தாய்ப்பால் கொடுப்பதால் பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம், 20 விழுக்காடுவரை குறைகிறது' எனப் பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒவ்வோர் ஆண்டும் இந்தியா உள்ளிட்ட 120 நாடுகளில் ஆகஸ்ட் முதல் வாரம், தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 1998ம் ஆண்டில் 50 விழுக்காடாகவும், 2005ல் 55 விழுக்காடாகவும் உயர்ந்தது. ஆனால், கடந்த ஆண்டு, தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் 40 விழுக்காடாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.