2011-08-06 15:00:35

2020 ல் வளர்ந்த நாடாக இந்தியா மாறும் : கலாம் உறுதி


ஆக.06,2011. "இந்தியா 2020 ல் வளர்ந்த நாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை,'' என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நடந்த நிர்வாக கட்டட அடிக்கல் நாட்டு விழா மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற கலாம், மாணவர்களே உங்களை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மாணவன், மாணவியின் முக்கியமான விடயம். மாணவர்கள் கனவுகள் காண வேண்டும். அதன் மூலம் தங்கள் லட்சியத்தை அடைய வேண்டும். உங்கள் அனைவரையும் 2030ல் சந்திரனில் சந்திக்கிறேன். அப்போது எனக்கு வயது 100 ஆக இருக்கும் என்றார்.
நாம் உழைத்துத் தான் நாட்டை வளமான நாடாக ஆக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை, கிராமங்களின் வளர்ச்சிதான். கிராம எழுச்சி இந்தியாவின் வளர்ச்சி. கிராமங்களில் சாலைகள் மூலம் இணைப்பு, தகவல் தொடர்பு இணைப்பு, அறிவு சார்ந்த இணைப்பு இவை மூன்றும் சேர்ந்தால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இன்னும் ஒன்பது ஆண்டுகளில் அதாவது 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும் கலாம் கூறினார்.
உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால் இந்தியா முன்னேறும். அனைத்து வசதிகளிலும் மேம்பட்ட நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் என்றார் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.







All the contents on this site are copyrighted ©.