2011-08-05 15:07:44

ஆகஸ்ட் 06. வாழ்ந்தவர் வழியில் ....


உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். இலேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிசிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு.
ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6ம் நாள் ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர்.
பாலிடெக்னிக் படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது.
நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது.
காளானிலிருந்து பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். 1945ஆம் ஆண்டில் அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங், ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகிய மூவருக்கும் மருத்துவத்திற்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது.
1955ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி இலண்டனில் காலமானார் விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஃப்பௌமிங்








All the contents on this site are copyrighted ©.