2011-08-04 15:06:49

கிழக்கு ஆப்ரிக்காவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் முனைப்பாய்ச் செயல்படுகின்றன


ஆக.04,2011. பஞ்சம் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் முனைப்பாய்ச் செயல்படுகின்றன என்று கிழக்கு ஆப்ரிக்க ஆயர் பேரவைகளின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
ஜேஆர்எஸ் என்ற இயேசு சபை அகதிகள் அமைப்பு, சிஆர்எஸ் என்ற கத்தோலிக்க நிவாரணப் பணிகள் அமைப்பு, காரித்தாஸ் எத்தியோப்பியா, காரித்தாஸ் கென்யா போன்றவை வட கென்யாவில் முகாம்களிலுள்ள ஆயிரக்கணக்கான அகதிகளுக்கும், சொமாலியாவில் புலம் பெயர்ந்த மக்களுக்கும் உதவி வருகின்றன என்று அவ்வுறுப்பினர்கள் கூறினர்.
எத்தியோப்பியா, சொமாலியா, கென்யா ஆகிய நாடுகளில் ஏறக்குறைய ஒரு கோடியே இருபது இலட்சம் பேருக்கு உணவு, சுத்தநீர் மற்றும் அடிப்படை நலவாழ்வு வசதிகள் தேவைப்படுகின்றன. அதேவேளை, தென் சொமாலியாவில் சுமார் 37 இலட்சம் பேர் பசிச்சாவை எதிர்நோக்குகின்றனர்.
சொமாலியாவின் சில பகுதிகளைப் பஞ்சப்பகுதி என்று ஐ.நா.அறிவித்துள்ளது. ஐ.நா.நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளில் இவ்வாறு அறிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். மேலும், இப்புதனன்று சொமாலியாவின் இன்னும் சில பகுதிகளையும் பஞ்சப்பகுதி என்று ஐ.நா.அறிவித்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.