2011-08-03 16:29:29

ஆகஸ்ட் 04, 2011. – வாழ்ந்தவர் வழியில்........,


1929ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் நாள் நாகர்கோயில் அருகில் உள்ள கேசவன்புதூரில் பிறந்த அகத்தியலிங்கம் தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.
கேரளா பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற பின் அமெரிக்க ஐக்கிய நாடு சென்று இந்தியானா பல்கலைக்கழகத்தில் மற்றுமொரு முனைவர் பட்டம் பெற்றார்.
அகத்தியலிங்கனார் தாம் பயின்ற இந்து கல்லூரியில் தமிழ்விரிவுரையாளர் பணியைத் தொடங்கித் தில்லிப் பல்கலைக்கழகத்தில் சில காலம் இணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். 1968 முதல் 1989 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இயக்குனராகவும் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மூன்றாண்டுகள் வருகைதரு பேராசிரியராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக மூன்றாண்டுகள் பணிபுரிந்தவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வருகைதரு பேராசிரியாகவும் மைசூர் செம்மொழி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வறிஞராகவும் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் தமிழ் அமைப்புகள் மொழியியல் அமைப்புகளில் பொறுப்பு வகித்த பெருமைக்கு உரியவர். அனைத்து இந்திய மொழியியல் கழகத்தை உருவாக்கியவர்களில் குறிப்பிடத்தக்கவர்.
அகத்தியலிங்கனார் தமிழில் 24 நூல்களையும் ஆங்கிலத்தில் 9 நூல்களையும் எழுதியுள்ளார். 200க்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வரைந்த பெருமைக்கு உரியவர். இவை யாவும் மொழியியல், சங்க இலக்கியம், தொல்காப்பியம் பற்றியன. உலக மொழிகள் பற்றி இவர் எழுதிய நூல்கள் உலக மொழிகள் பலவற்றின் வரலாற்றையும் சிறப்பையும் அதன் அமைப்புகளையும் நமக்கு எடுத்துரைக்கின்றன.
அதுபோல் சங்க இலக்கியம் குறித்துச் சங்கத்தமிழ் என்னும் பெயரில் 5 தொகுதிகளை எழுதியுள்ளார். உலகமொழிகள் என்ற வரிசையில் 7 தொகுதிகள் வெளிவந்துள்ளன. தொல்காப்பியம் பற்றி 3 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவரது தமிழ், ஆங்கிலக் கட்டுரைகள் பலவும் உலகத்தரம் வாய்ந்த இதழ்களில் வெளிவந்துள்ளன.
முனைவர் ச.அகத்தியலிங்கம் புதுச்சேரி அருகே கிளியனூர் காமராசர் குடியிருப்பு அருகில் நடைபெற்ற மகிழ்வுந்து விபத்தில் 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் நாள் காலை 11 மணியளவில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.