2011-08-02 16:14:21

புதுடெல்லியில் தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள்


ஆக.02,2011. புதுடெல்லிக்குக் கொண்டு வரப்பட்டுள்ள தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு இலட்சக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர்.
தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள் கடந்த ஜூலை 30ம் தேதி புதுடெல்லி இயேசுவின் திருஇதயப் பேராலயத்தில் வைக்கப்பட்டது. இப்பேராலயத்தில் ஏராளமான அருட்பணியாளர்களுடன் கூட்டுத்திருப்பலி நிகழ்த்திய டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, இப்புனிதரின் நற்பண்புகளை அன்றாட வாழ்வில் கடைபிடிக்குமாறு விசுவாசிகளை வலியுறுத்தினார்.
சலேசிய சபையினர் கல்வித்துறையிலும் ஏழைகளுக்கு உதவுவதிலும் ஆற்றி வரும் அரும்பணிகளையும் பேராயர் பாராட்டினார்.
2009ம் ஆண்டு இத்தாலியின் வால்தோக்கோவிலிருந்து உலகின் ஐந்து கண்டங்களுக்கும் தூய ஜான் போஸ்கோவின் புனிதப் பொருட்கள் கொண்ட பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. சலேசிய சபை தொடங்கப்பட்டதன் 150ம் ஆண்டு மற்றும் 2015ல் இடம் பெறும் இப்புனிதர் பிறந்ததன் 200ம் ஆண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்தியா வந்தடைந்த இப்புனிதப் பெட்டி வடகிழக்கு மாநிலங்களில் எடுத்துச் செல்லப்பட்டு தற்சமயம் புதுடெல்லியில் வைக்கப்பட்டுள்ளது.
சலேசிய சபையைத் தொடங்கிய தூய ஜான் போஸ்கோ, இத்தாலியின் Piedmont ல் 1815ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்தார். 1888ம் ஆண்டு சனவரி 31ம் தேதி இறந்தார். 1934ம் ஆண்டு புனிதர் என அறிவிக்கப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.