2011-08-02 16:23:49

ஆகஸ்ட் 03 – வாழ்ந்தவர் வழியில்...


யோவான் நற்செய்தியில் மும்முறை குறிப்பிடப்பட்டுள்ள நிக்கதேம் என்ற யூத மதத் தலைவர் இயேசுவை மனதாரத் தேடிக் கண்டவர்களில் ஒருவர். பரிசேயர் குடும்பத்தில் பிறந்து, மதத் தலைவர்களின் உயர்மட்டக்குழுவில் ஒருவராக வாழ்ந்த நிக்கதேம் நேர்மையான மனம் கொண்டவர். இவர் உண்மையை உளமாரத் தேடியவர் என்பதை யோவான் நற்செய்தியின் இரு பகுதிகள் நமக்கு உணர்த்துகின்றன. அதே நேரம், தன் உயரிய சமுதாய நிலை மீதும் அவருக்கு பற்று இருந்ததைக் காண முடிகிறது. எனவே இவர் இரவில் இயேசுவைச் சந்திக்கச் சென்றார் (யோவான் 3: 1-21). இந்தச் சந்திப்பு இவர் வாழ்வில் மாற்றங்களை ஆரம்பித்து வைத்தது.
பரிசேயர்களும், மதத் தலைவர்களும் கண்மூடித் தனமாக இயேசுவைக் கண்டனம் செய்தபோது, இவர் துணிவுடன் ஒரு கேள்வியை எழுப்பினார்:
அங்கிருந்த பரிசேயருள் ஒருவர் நிக்கதேம். அவரே முன்பு ஒரு நாள் இயேசுவிடம் வந்தவர். அவர் அவர்களிடம், 'ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?' என்று கேட்டார். (யோவான் 7: 51)
மோசே சட்டங்களைப் பற்றிய தெளிவையும், உண்மையை அறிந்து கொள்ளும் நல்ல மனசாட்சியையும் இவர் கொண்டிருந்தார் என்பவை இந்தக் கூற்றில் தெளிவாகின்றன.
இயேசுவின் பக்கம் அதிகம் ஈர்க்கப்பட்ட இவர், அவரது கொடுமையான மரணத்தைத் தடுக்க முடியாமல் திண்டாடினார். தன் வாழ்வை ஆழமாய் பாதித்த இயேசுவுக்கு, தகுந்த மரியாதையுடன் இறுதி மரியாதைகளை இவர் துணிந்து செய்தார். (யோவான் 19:39–42).
செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்த இவர் இயேசுவின் மரணத்திற்குப் பின், அவரது சீடர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்றும், புதுமைகள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. புனித நிக்கதேமின் திருநாள் ஆகஸ்ட் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.