2011-08-01 16:29:57

வாரம் ஓர் அலசல் – பகிரா வாழ்வு பதறும், சிதறும்


ஆக.01,2011. “மகன்களை மாடாக்கிய தந்தை”. இவ்வாறு தடித்த எழுத்துக்களில் தலைப்பிடப்பட்டு வெளியான செய்தி ஒன்றை நாம் இந்த ஜூலை 24ம் தேதி செய்தித்தாளில் வாசிக்க நேர்ந்தது. மகன்கள் மாடுகளாக ஆக்கப்பட்டார்களா?, தந்தை, தான் பெற்ற மகன்களை மாடுகளுக்குப் பதிலாக ஏர்பூட்டி நிலத்தை உழுதாரா? என்ன கொடுமை இது!, ஏன் இந்த நிலை? என்ற கேள்வியுடன் அந்தச் செய்தியை முழுவதும் உடனடியாக வாசித்தோம். “கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை” என்று நம் ஔவை மூதாட்டி சொன்னார்களே, அந்த வறுமைதான் இதற்குக் காரணம் என்பது புரிய வந்தது. இது ஏதோ உலகின் மிக ஏழையான பத்து நாடுகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஜிம்பாபுவே, காங்கோ குடியரசு, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நடக்கவில்லை. மாறாக, வளர்ந்து வரும் இந்தியாவில்தான், அதுவும் மும்பை மாநகர் அமைந்துள்ள மஹாராஷ்டிர மாநிலத்தில்தான் இது நடந்துள்ளது.
அமராவதி மாவட்டத்தில் சீர்கேட் என்ற கிராமத்தில் வாழும் கிஷன்ராவ் தபூர்கர் என்பவர், எட்டு ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கிறார். ஆனால் அண்மைக் காலங்களில் இயற்கை பொய்த்த காரணமாக கடும் வறுமையில் வாடியிருக்கிறார். அண்மையில் மழை பெய்ததையடுத்து அவரது நிலத்தைப் பதம் செய்யத் துவங்கினார். நிலத்தை உழுவதற்கு காளை மாடுகள் இல்லை. எனவே தனது இரண்டு மகன்களையும் ஏரில் பூட்டி நிலத்தில் களம் இறக்கி உழவுப் பணியைத் துவக்கியுள்ளார். “காளை மாடுகள் வாங்கும் அளவிற்கு எங்களுக்குப் போதிய பணம் இல்லை, இதனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை” என்று, அந்த இரண்டு மகன்களுமே, பத்திரிகையாளரிடம் சொல்லியிருக்கின்றனர். “நாள் ஒன்றுக்கு இரண்டு காளைகளுக்கு ஆயிரம் ரூபாய் வாடகை கேட்கின்றனர், விலைக்கு வாங்க வேண்டுமென்றால் இருபதாயிரம் ரூபாய்த் தேவைப்படும். என்ன செய்வது? நாங்கள் மாடாக உழைக்கிறோம்” என்றும் அம்மகன்கள் சொல்லியிருக்கின்றனர்.
உலகில் மனிதர் நிறம், இனம், மொழி, போன்றவற்றால் வேறுபட்டுக் காணப்படுவர். ஆனால் இவர்கள் ஒன்றில் மட்டும், அதாவது “வறுமையில்” மட்டும் “ஒருமை” யாகி விடுகின்றனர். ஏனெனில் வறுமைக்குச் சாதியோ, நிறமோ, மொழியோ பார்க்கத் தெரியாது. புதுக்கவிதை ஒன்று இப்படி எழுதப்பட்டிருக்கிறது.
“இவர்களுக்குள் ஜாதியில்லை, மதமில்லை, இனமில்லை, மொழியில்லை, நாடில்லை, எல்லையில்லை, ஆனால் “ஒருமை” யாயினர் வறுமையில்!”
கடன் தொல்லை காரணமான எத்தனை குடும்பங்கள், கூட்டாகத் தற்கொலை செய்து கொள்கின்றன. அதிகம் படித்தக் குடும்பங்களில்கூட இது நடக்கின்றது. உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் இந்த ஜூலை 23ம் தேதி சயனைடு உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் செம்மாண்டப்பட்டியில் வறுமையின் காரணமாக ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். திருவண்ணாமலை அருகே, கணவரை இழந்து வறுமையில் வாடிய ஏழைத்தாய், தனக்கு மூன்றாவதாகப் பிறந்த பெண்குழந்தையைக் காப்பகத்தில் ஒப்படைத்தார் என்று ஜூலை 28ம் தேதி, செய்தி வெளியாகியது. 2009ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,368 ஏழை விவசாயிகள் வறுமை மற்றும் கடன்தொல்லையால் தற்கொலை செய்துள்ளனர்.
ஆனால் இந்தியாவில் போதுமான உற்பத்தி இல்லை, நிதி இல்லை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் பணக்கார வீட்டுத் திருமணங்களில் எவ்வளவு உணவுகள் குப்பைத் தொட்டியில் கொட்டப்படுகின்றன. இந்திய உணவு அமைச்சகம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண்மை உணவுப் பொருட்கள் ஆண்டுதோறும் வீணடிக்கப்படுகின்றனவாம். அதேசமயம், இந்தியா உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள் நாட்டின் மக்களுக்கு உணவு கொடுப்பதற்கானத் தேவைக்கு அதிகமாக உள்ளதாம். நாடு முழுவதும் நியாய விலைக்கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பொது வினியோகத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழலும் முறைகேடும் நடைபெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டும் பொது வினியோகத் திட்டத்தில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்து இருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “இந்தியாவை சக்தி வாய்ந்த நாடு என்று நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள். அதேநேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச்சாவுகள் நடைபெற்று வருகின்றன. ஏழைக்கு ஓர் இந்தியா, பணக்காரருக்கு ஓர் இந்தியாவா? என்று அண்மையில் கோபத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் 35 விழுக்காட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டின் காரணமாக எலும்பும் தோலுமாக மாறி உருக்குலைந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். ஐந்து வயதுக்குட்பட்ட ஆறாயிரத்துக்கு அதிகமான சிறார் ஊட்டச்சத்துக் குறைவால் தினமும் இறக்கின்றனர். உலகம் முழுவதும் 200 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வைட்டமின் மற்றும் புரதச்சத்துக் குறைவால் துன்புறுகின்றனர். இவர்களில் 30 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இந்த நிலை அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை (Rs. 2,770,000 million) ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் நிலை இதுவென்றால் இலங்கையில் கிளிநொச்சிச் சிறார்கள், “சப்பாத்து வாங்கக் காசு இல்லை. ஆனாலும் படிக்க வேணும். என்ட தேவை இருக்கிறதுதானே அண்ணா. சண்ட நடக்கேக்கயும் நாங்க பள்ளிக்கூடம் போனோம்” என்று நிருபர் ஒருவரிடம் சொல்லியிருக்கிறார்கள். வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் இச்சிறார், இலங்கையின் பல ஆண்டுகள் இனப்போரின் போது, இடியா, வானவேடிக்கையா, குண்டுமழையா எனப் பிரித்தறிய முடியாதப் பருவங்களில் தப்பிப் பிழைத்தவர்கள்.
அன்பு நேயர்களே, இந்நாட்களில் சொமாலியா, எத்தியோப்பியா, கென்யா, திஜிபவுத்தி ஆகிய ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகள், பசி, பட்டினி, வறுமை இவைகளுக்கு அதிகமாகப் பேசப்படுகின்றன. இந்நாடுகள் கடந்த 60 ஆண்டுகளில் தற்சமயம் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளன. சொமாலியாவில் ஒவ்வோர் ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பசியினால் இறக்கின்றது. தெற்கு சொமாலியாவைப் “பஞ்சப்பகுதி” என்றே ஐ.நா.அறிவித்துள்ளது. இந்நாட்டின் மக்கள் தொகையில் ஏறக்குறைய பாதிப்பேர், அதாவது 37 இலட்சம் பேர் பசியால் வாடுகின்றனர். இவர்களில் சுமார் 28 இலட்சம் பேர் தெற்கு சொமாலியாவைச் சேர்ந்தவர்கள். இந்நாட்டின் 75 இலட்சம் பேரில் 25 விழுக்காட்டினர் புலம் பெயர்ந்துள்ளனர் எத்தியோப்பியாவில் 45 இலட்சத்து 60 ஆயிரமும் கென்யாவில் 24 இலட்சமும் உணவு நெருக்கடியை எதிர்நோக்குகின்றனர். இந்த வடகிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் இந்நிலையையொட்டி, ஆப்ரிக்க ஒன்றிய அவை, இம்மாதம் 9ம் தேதி கருத்தரங்கு ஒன்றைக் கூட்டவிருக்கின்றது. திருத்தந்தை 16ம் பெனடிக்டும் வறட்சி மற்றும் பஞ்சத்தால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளின் நெருக்கடி நிலையை எடுத்துக்கூறி வருகிறார். இயேசு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீன்களையும் பலுகச் செய்த புதுமை பற்றிய இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை வைத்து இஞ்ஞாயிறு மூவேளை உரையில் பேசிய திருத்தந்தை, பசி, தாகத்தால் வருந்துவோருக்கு உதவுவதற்கு நமக்கிருக்கும் பொறுப்புணர்வை விளக்கினார். தேவையில் இருப்போருக்கு உணவு கொடுத்து அவர்களோடு நமது உணவைப் பகிர்ந்து கொள்வோம் என்றார். ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளில் பல சகோதர சகோதரிகள் இந்நாட்களில் பஞ்சத்தின் வேதனையை அனுபவிக்கின்றனர். அவர்கள் மீது பரிவும் சகோதரத்துவ ஒருமைப்பாடும் காட்டுவோம் என்றார்.
எனது பிள்ளை யு.எஸ்ஸில் இருக்கிறான் என்று நம்மவர் பெருமையாகச் சொல்லும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஏழு பேரில் ஒருவர் வறுமையில் வாடுவதாக அண்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இன்று உலகில் 80 கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர். ஊட்டச்சத்துக் குறைவால் ஒவ்வொரு நாளும் உலகில் 2 கோடியே 40 இலட்சம் பேர் தினமும் மடிகின்றனர். அன்பு நேயர்களே, மகாத்மா காந்திஜி சொன்னார்
“இயற்கையின் வாழ்வில், விலங்குகள் ஒருபோதும் பட்டினியால் இறப்பதில்லை. அவற்றுக்கிடையே ஒரு நாளைக்குப் பலமுறை சாப்பிடும் பணக்காரர், ஒரு வேளைக்குக்கூட உணவு கிடைக்காத ஏழை என்ற பிரிவுகள் இல்லை. இந்த இயல்பற்ற போக்குகள் மனிதர்களாகிய நம்மிடமே உள்ளன. ஆனால் நாம் விலங்குகளைவிட உயர்வானவர்கள் என எண்ணிக் கொள்கிறோம்”
பாரதத் தந்தை சொன்னது போல, உலகிலே, இத்தனை மக்கள் பசி பட்டினி வறுமையால் மடிவதற்கு நாடுகளில் போதுமான செல்வமும் உணவுப் பொருட்களும் இல்லாமல் இல்லை. ஆனால் மனிதரிடம் இரக்கமும் பரிவும் பகிர்தலும் இல்லாமையே இதற்குக் காரணம். அரசியலும் ஒரு காரணம். இத்தாலியின் அக்குய்லா ஆயர் இஞ்ஞாயிறன்று சொன்னார் – “இன்றையப் பசியையும் வறுமையையும் போக்க மனிதர் தங்களது வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்று. தேவைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று. கொஞ்சமாக வைத்து வாழும் ஏழையின் முகத்தைப் பாருங்கள். அதில் சிரிப்பு இருக்கும். மலர்ச்சி இருக்கும். ஆனால் செல்வந்தர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியுமா?” என்று. இந்த ஆயர் ஆப்ரிக்காவில் ஏழையர் மத்தியில் பல ஆண்டுகள் பணி செய்தவர்.
இருப்பவர் இல்லாதவரோடு பகிர்ந்து வாழுங்கள், காகங்களைப் போல கரைந்துண்ணுங்கள் என்பதெல்லாம் சரிதான். அதேசமயம் நாம் ஒவ்வொருவரும் நமது அன்றாடத் தேவைகளைக் குறைத்து வாழ்ந்தால் எல்லாரும் பசியில்லாமல் வாழலாம். எப்படியெனில், இல்லாதவர் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் வாடுவார். அதேநேரம் இருப்பவர் அந்தத் தண்ணீரை வீணாக்கிக் கொண்டிருப்பார். வறியவர் ஒருவேளை உணவுக்காக ஏங்குவார். செல்வந்தர் ஒரு நாளில் பல நேரம் உணடு மகிழ்வார். பசிக்காமல் இருந்தால்கூட அவர் சாப்பிடுவார். எனவே அன்பர்களே, சீராக வாழப் பழகுவோம். பரிவுகொண்டு பகிர்ந்து வாழ்வோம். அலமாரியில் பயன்படுத்தாமல் அடுக்கி வைக்கப்பட்டிருப்பவை தேவையில் இருப்போர்க்கென உணருவோம். இயேசு சொல்கிறார் – “நான் பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள்” என்று. RealAudioMP3 ஒருமுறை முல்லா உடல்நலத்திற்காக நடந்து கொண்டிருந்தார். வழியில் அவரது நண்பரும் அவரோடு சேர்ந்து கொண்டார். இருவரும் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தார்கள். களைப்படந்த முல்லா, வழியில் ஒரு கடையில் நண்பருடன் பால் சாப்பிட அமர்ந்தார். அப்போது முல்லா, என்னிடம் காசு இல்லை, அதனால் ஒரு டம்ளர் பால் வாங்கி இருவரும் பாதிப் பாதிக் குடிப்போம் என்றார். சரி என்று பால் வாங்கினார்கள். அந்த ஊரில் சர்க்கரையை அவரவர்தான் போட்டுக் கொள்ள வேண்டும். அந்த நண்பர் முல்லாவிடம், என்னிடம் கொஞ்சம்தான் சீனி இருக்கிறது, எனவே முதல் பாதியை நீங்கள் குடித்துவிட்டுத் தாருங்கள். அடுத்தப் பாதிக்கு நான் சீனி போட்டுக் குடிக்கிறேன் என்றார். சீனியை ஒன்றாகப் போட்டுக் கலக்கலாமே என்று முல்லா சொன்னதற்கு அந்த நணபர் ஒத்து வரவில்லை. ஏனெனில் அவர் ஒரு கஞ்சன். வேறு வழியின்றி ஒத்துக் கொண்ட முல்லா, தன்னிடமிருந்த உப்புப் பொட்டலத்தை எடுத்து முதல் பாதி பாலில் போட்டுக் கலக்கினார். நான் அப்படித்தான் பால் சாப்பிட்டுப் பழக்கம் என்று சொல்லிக் கொண்டே முதல் பாதி பாலைக் குடித்து முடித்தார். திரண்டு போனப் பாலை பார்த்துத் திகைத்து நின்றார் முல்லாவின் நண்பர். ஆம். பகிரா வாழ்வு பதறும், சிதறும்.







All the contents on this site are copyrighted ©.