2011-08-01 16:25:59

ஆகஸ்ட் 2 வாழ்ந்தவர் வழியில்.....


“இலத்தீன், சட்டம் மற்றும் மருத்துவத்தின் மொழியானால், ப்ரெஞ்ச், தூதரக மொழியானால், ஜெர்மனியம் அறிவியலின் மொழியானால், ஆங்கிலம், வணிகத்தின் மொழியானால், தமிழ் பக்தியின் மொழியாகும், அது தூய்மைத்துவத்திற்கானப் பக்தியாகும்”.
“எல்லா உலகும் எனது உலகம், எல்லா மனித சமுதாயமும் எனது சகோதரத்துவம்”.
இந்தப் புகழ்வாய்ந்த கூற்றுகளுக்குச் சொந்தக்காரர் அருட்பணி சேவியர் எஸ்.தனிநாயகம்.
சேவியர் தனிநாயகம் என்று அழைக்கப்படும் அருட்பணி சேவியர் நிக்கோலாஸ் ஸ்தனிஸ்லாஸ் ஓர் ஈழத்துத் தமிழறிஞர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க அடிகோலியவர். தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்க் கலாச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் புகழ் பெறச் செய்தவர். இவர் யாழ்ப்பாணம், கரம்பொன் என்ற ஊரில் 1913ம் ஆண்டு ஆகஸ்டு 2 ம் தேதி பிறந்தார். இவர் அருட்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்னர் தனது முன்னோர் பெயரான “தனிநாயகம்” என்பதைத் தனது பெயரோடு இணைத்துக் கொண்டார். ப்ரெஞ்ச், ஜெர்மானியம், இத்தாலியம், இஸ்பானியம், போர்த்துக்கீசியம் உட்பட ஏறக்குறைய 12 மொழிகளில் சரளமாகப் பேசவும் எழுதவும் தெரிந்த பண்டிதர். தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைமாணிப் பட்டத்தையும் பின்னர் இலண்டனில் கல்வியியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1961 இல் மலேசியா சென்று மலேயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்தியக் கல்வியாய்வுகள் துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து ஓய்வு பெற்றபின் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். கத்தோலிக்க அருட்பணியாளராகிய தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தார். Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கிலக் காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் அகில உலகத்திலுமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். 1961 இல் சென்னையில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களும் எழுதி வெளியிட்டார். தமிழ்த் தூது என்ற நூல் உட்பட மொத்தம் 137 நூல்களை எழுதினார்.
மலேசியாவில் பணி புரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தோற்றுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16 - 23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். பின்னர் சென்னையில் நடந்த இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார்.
தனிநாயகம் அடிகளார் 1980 செப்டம்பர் 1 ம் தேதி உயிர் நீத்தார். 1981 இல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.