2011-07-30 14:02:48

வத்திக்கான் அதிகாரி:நார்வேயில் இடம் பெற்ற பயங்கரவாதச் செயல்கள் கடவுளுக்கு எதிரானக் குற்றம்


ஜூலை 30,2011. நார்வே நாட்டில் அண்மையில் இடம் பெற்ற குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு பயங்கரவாதச் செயல்கள் கடவுளுக்கு எதிரானக் குற்றம் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்த இரண்டு பயங்கரவாதச் செயல்களையும் நடத்தியது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள Anders Behring Breivik என்பவர் தனது விசாரணையின் போது சொன்ன கருத்துக்களை வைத்துப் பேசிய பேராயர் சால்வத்தோரே ஃபிசிக்கெல்லா, மதத்தை வன்முறைக்காக நாம் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றார்.
பாரம்பரியக் கிறிஸ்தவ நாடுகளில் இசுலாம் நுழைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்திலும், பன்மைக் கலாச்சாரப் போக்கு, ஐரோப்பாவில் முஸ்லீம்கள் ஆதிக்கம் செலுத்த விட்டுவிடும் என்ற நம்பிக்கையிலும் தான் இந்தத் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்பை நடத்தியதாக Breivik கூறியிருக்கிறார் என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
இத்தகைய எண்ணம், கடவுளோடும் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்தோடும் எத்தகைய தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று, புதிய நற்செய்தி அறிவிப்புக்கானத் திருப்பீட அவைத் தலைவர் பேராயர் ஃபிசிக்கெல்லா கூறினார்.
நார்வேயில் இம்மாதம் 22ம் தேதி இடம் பெற்ற பயங்கரவாதச் செயல்களில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்







All the contents on this site are copyrighted ©.