2011-07-30 14:11:51

ஜூலை 31, வாழ்ந்தவர் வழியில்...


1491ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டில் Basque பகுதியில் ஒரு பிரபுக் குடும்பத்தில் பிறந்தவர் இனிகோ. ‘இனிகோ’ என்ற பெயரில் பொதிந்திருக்கும் தீ என்ற பொருளுக்கேற்ப, இளவயதில் பேரும் புகழும் அடைய வேண்டும் என்ற தீ இவர் உள்ளத்தில் அதிகம் எரிந்தது. 1521ம் ஆண்டு பிரெஞ்ச் படைக்கெதிராக பாம்பலோனா என்ற இடத்தில் ஒரு கோட்டையைப் பாதுகாக்கப் போராடியபோது, இவரது காலில் குண்டடிப்பட்டது.
கால் கட்டப்பட்ட நிலையில் படுக்கையில் இருந்த இவர் வீரர்களின் வரலாற்றைப் படிக்க விரும்பினார். ஆனால், அவர் இருந்த மாளிகையில் புனிதர்களின் வாழ்க்கை வரலாறு மட்டுமே இருந்தது. வேண்டா வெறுப்பாக அந்நூலைப் படிக்க ஆரம்பித்த இனிகோ, விரைவில் அந்நூலில் இடம் பெற்றவர்களின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டார். இவர்கள் இறைவனுக்கு இவ்விதம் உழைக்கும்போது தான் ஏன் இதுபோல் இறைவனுக்கு உழைக்க முடியாது என்று எண்ணினார்.
அவர் அதுவரை கனவு கண்டு வந்த உலக வாழ்வை விடுத்து, துறவு வாழ்வை மேற்கொண்டார். இயேசு சபை என்ற ஒரு துறவு சபையை 1540ம் ஆண்டு தோற்றுவித்தார். ஆன்மீகப் பயிற்சிகள் என்ற நூலை உருவாக்கி, பலரை அப்பயிற்சிகளில் பயிற்றுவித்தார். இவரது உற்ற நண்பர் புனித பிரான்சிஸ் சேவியரை இந்தியாவில் மறைபணி செய்வதற்கு அனுப்பி வைத்தார்.
1556ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி இவர் இறைவனடிச் சேர்ந்தார். 1622ம் ஆண்டு திருத்தந்தை 15ம் கிரகோரி இவரையும் இவரது உற்ற நண்பர் பிரான்சிஸ் சேவியரையும் புனிதர்களாக உயர்த்தினார். இவர் உருவாக்கிய இயேசு சபை இன்று உலகின் பல நாடுகளில் பணி புரிந்து வருகிறது. இவரது திருநாள் ஜூலை 31 கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.