2011-07-29 15:21:21

ஜூலை 30. வாழ்ந்தவர் வழியில் ....


ஃபோர்ட் வாகன நிறுவனத்தின் அமெரிக்க நிறுவனரான ஹென்றி ஃபோர்ட் 1863ம் ஆண்டு ஜூலை 30ம் நாள் மிச்சிகன் மாநிலத்தின் கிரீன்ஃபீல்ட் நகரில் பிறந்தார். இவர் அறிமுகப்படுத்திய 'மாதிரி டி' ஃபோர்ட் வாகனம் அமெரிக்கப் போக்குவரத்திலும், தொழில்துறையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. அவருடைய தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும் வழங்கினார். ஒரு நாளைக்கு 2.34 டாலர் ஊதியமாக இருந்த காலத்தில் அதனை 5 டாலராக உயர்த்திக்கொடுத்தவர் ஃபோர்ட். ஏனைய நிறுவனத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போது, தொழிலாளர்களின் சம்பளம் உயர்ந்தால்தான் அவர்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும், அதன் மூலம் உற்பத்திப் பொருட்களின் விற்பனையும் அதிகரித்து அதிக இலாபமும் கிடைக்கும் என விளக்கம் கொடுத்தார் இவர். ஒரு நாளைக்கு 9 மணி நேர வேலை என்பதை முதன் முதலாக 8 மணி நேரம் எனக் குறைத்தவர் இவரே. இதன் மூலம் ஒவ்வொன்றுக்கும் 8 மணி நேரம் என ஒரு நாளைக்கு மூன்று பணிநேரங்களைக் கொண்டு அதிகப்பேருக்கு வேலை கொடுத்தார்.
ஏழைகளும் வாங்கும் வகையில் வாகனங்களின் விலையையும் குறைத்தார். இவரின் 'மாதிரி டி' வாகனம் 1908ல் உருவாக்கப்பட்டபோது அதன் விலை 850 டாலராக இருந்தது. மக்கள் அதிக அளவில் வாங்கத் தொடங்கி அது மிகப் பிரபலமானபோது, அதன் விலையைப் படிப்படியாகக் குறைக்க குறைக்க விற்பனை மேலும் அதிகமாகி 1925ல் அதன் விலையை 290 டாலருக்குக் கொண்டுவந்தார் ஃபோர்ட். ஏழை மக்கள் வாங்கும் அளவுக்கு விலையைக் கொணர்ந்த வெற்றி ஒரு புறம் என்றால், விலை குறைப்பால் விற்பனை பெருமளவில் அதிகரித்து, முன்னைவிட இலாபம் அதிகரித்தது இன்னொரு புறம். இதுதான் அவரின் வியாபார யுக்தி. அந்தக் காலத்திலேயே பத்தொன்பதே ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் 1கோடியே 55 இலட்சம் வாகனங்களை விற்றிருக்கிறார் என்றால் அவரின் யுக்தி புரிகிறது. நிர்வாகத்திறமையும், வியாபார யுக்தியும், தொழிலாளர் நலனில் அக்கறையும் கொண்டிருந்த ஹென்றி ஃபோர்ட் 1947ம் ஆண்டு ஏப்ரல் 7ந் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் மிச்சிகனின் ஃபெயார் லேன் எனுமிடத்தில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.