2011-07-27 16:23:16

திருப்பீடமும் மலேசியாவும் அரசியல் உறவை உருவாக்கியுள்ளன


ஜூலை27,2011. திருப்பீடமும் மலேசியாவும் தங்களுக்கிடையே நட்புறவை வளர்த்துக் கொள்ளும் ஆவலில் இவ்விரு தரப்பும் அரசியல் உறவை உருவாக்கத் தீர்மானித்துள்ளன என்று இப்புதனன்று அறிவிக்கப்பட்டது.
திருப்பீடத்தைப் பொறுத்தவரை அப்போஸ்தலிக்கத் தூதரகம் என்ற நிலையிலும், மலேசியாவைப் பொறுத்தவரை தூதரகம் என்ற நிலையிலும் இவ்வரசியல் உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், மலேசியா, திருப்பீடத்துடன் அரசியல் உறவைக் கொண்டிருக்கும் 179வது நாடாக மாறியுள்ளது.
மலேசியப் பிரதமர் Najib Razak, இம்மாதம் 18ம் தேதி திருத்தந்தை 16ம் பெனடிக்டை காஸ்தல் கந்தோல்ஃபோவில் சந்தித்துப் பேசியதற்குப் பின்னர் இவ்வறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏறக்குறைய 2 கோடியே 83 இலட்சத்து 6,700 மக்கள் தொகையைக் கொண்ட மலேசியாவில் 60.4 விழுக்காட்டினர் இசுலாமியர். 19.2 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். 9.1 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். 6.3 விழுக்காட்டினர் இந்துக்கள். 2.6 விழுக்காட்டினர் சீனப் பாரம்பரிய மதத்தினர். 2.4 விழுக்காட்டினர் இயற்கையை வழிபடுபவர்கள்.
தென்கிழக்கு ஆசிய நாடாகிய மலேசியாவில் 1511ம் ஆண்டில் கத்தோலிக்கத் திருச்சபை வேரூன்றத் தொடங்கியது. இந்நாட்டின் மலாக்காவில் முதல் போர்த்துக்கீசிய மறைப்பணியாளர்கள் தங்கள் பணியைத் தொடங்கினர். 1545ல் தூய பிரான்சிஸ் சவேரியார் மலாக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் மலேசியாவில் 11 ஆயர்கள், 274 மறைமாவட்ட குருக்கள், 119 துறவறக் குருக்கள், 123 அருட்சகோதரர்கள், 759 அருட்சகோதரிகள் மற்றும் 8,50,720 கத்தோலிக்கர் உள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.