2011-07-27 16:24:28

ஐரோப்பா “இளையோர் பற்றாக்குறையால்” துன்புறுகின்றது - இஸ்பெயின் கர்தினால் ரோக்கோ


ஜூலை27,2011. ஐரோப்பாவிலும் இஸ்பெயினிலும் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால் அப்பகுதி “இளையோர் பற்றாக்குறையை” எதிர்கொள்கிறது என்று இஸ்பெயின் ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய ரோக்கோ வரெலா தெரிவித்தார்.
இஸ்பெயினின் ஹூவான் கார்லோஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளையோர்க்கானப் பணி குறித்த கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்த மத்ரித் பேராயரான கர்தினால் ரோக்கோ, இஸ்பெயினில் 22 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும், திருச்சபையிலும் பிற பகுதிகளிலும் இறையழைத்தல்கள் மிகக் குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் கூறினார்.
வருகிற ஆகஸ்ட் 18 முதல் 21 வரை நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினம், புதுப்பிக்கப்பட்ட நற்செய்திப்பணிக்கும், இறையழைத்தல் அதிகரிக்கவும், கிறிஸ்தவக் குடும்பங்கள் உறுதிப்படுத்தப்படவும் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் கர்தினால் ரோக்கோ.
திருச்சபையில் உலக இளையோர் தினம், மறைந்த திருத்தந்தை 2ம் ஜான் பாலால் உருவாக்கப்பட்டதையும் கர்தினால் ரோக்கோ நினைவுகூர்ந்தார்







All the contents on this site are copyrighted ©.