2011-07-25 16:38:00

திருத்தந்தையின் மூவேளை செப உரை


ஜூலை 25, 2011. நன்மை எது என்பதைக் கண்டுகொண்டு அதனை நாடிச் செல்லும் ஓர் இதயத்தின் வளர்ச்சியிலேயே வாழ்வின் உண்மையான தரம் அடங்கியுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்' என சாலமன் மன்னன் இறைவனை நோக்கி வேண்டிய வார்த்தைகளுடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய திருத்தந்தை, இளவயதில் ஆட்சிக்கு வந்த சாலமன் மன்னன் தன் கனவில் தோன்றிய இறைவனிடம் வேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.
நீண்ட ஆயுளையோ, பெரும்செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ இறைவனிடம் வேண்டாத சாலமன், நன்மை தீமை பகுத்தறியும் ஞானம் நிறைந்த உள்ளத்தை தந்தருளுமாறு வேண்டியது, உண்மையின் குரலைக் கண்டுகொண்டு செயல்படும் மனச்சான்றின் தேவையைக் குறிப்பிடுவதாக உள்ளது என்றார் பாபிறை.
அரசு நிர்வாகப் பணியில் உள்ளோருக்கு, மேலும் பல பொறுப்புணர்வுகள் உள்ளன என்ற திருத்தந்தை, அவர்களுக்கு இறைவனின் தேவையும் அதிகம் அதிகமாக உள்ளது என்றார்.
நம் வாழ்வின் உண்மை தரமானது, சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட மனச்சான்றைச் சார்ந்துள்ளது எனத் தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.







All the contents on this site are copyrighted ©.