2011-07-23 15:52:43

நார்வே தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் திருச்சபை ஒருமைப்பாடு


ஜூலை 23,2011. நார்வேயில் வெள்ளிக்கிழமை மதியம் நிகழ்ந்த இரண்டு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்கள், இன்னும் அனைத்து மக்களுடனும் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார் நார்வே நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Emil Paul Tscherrig.
இத்தாக்குதல்கள் குறித்து வத்திக்கான் வானொலியில் தொலைபேசி வழியாகப் பேசிய பேராயர் Tscherrig, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நார்வே நாடு சந்தித்திருக்கும் பெரும் துயர் என்று அந்நாட்டினர் கருதுவதாகத் தெரிவித்தார்.
அமைதியான ஓர் நாட்டில், மிகுந்த சனநாயகமும் சுதந்திரமும் உள்ள ஒரு சமுதாயத்தில் இத்தகைய ஒரு நிகழ்வு, அனைத்து மக்களுக்கும் பெரும் துயரைக் கொடுத்துள்ளது என்றார் பேராயர் Tscherrig.
நார்வே தலைநகர் ஆஸ்லோவின் மையப் பகுதியில் இடம்பெற்றுள்ள பெரும் குண்டு வெடிப்பில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதியில் இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு இடம் பெற்ற இடத்துக்கு அருகில் நார்வேயிலேயே பரபரப்புச் செய்திகளை வெளியிடும் வீஜி என்ற பத்திரிகையின் அலுவலகமும் அமைந்துள்ளது.
ஆஸ்லோவில் குண்டு வெடிப்பு நடைபெற்ற சில மணிநேரங்களுக்குள் நார்வேயின் Utoeya என்ற சிறிய தீவில் சுமார் ஒரு மணிநேரம் துப்பாக்கிச் சூடு நடந்ததில் குறைந்தது 84 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இந்தத் தீவில் தொழிற்கட்சியின் இளைஞரணிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது.







All the contents on this site are copyrighted ©.