2011-07-23 15:59:45

திருத்தந்தை 12ம் பத்திநாதர் 11 ஆயிரம் உரோமன் யூதர்களைக் காப்பாற்றினார்


ஜூலை 23,2011. இரண்டாம் உலகப் போரின் போது திருத்தந்தை 12ம் பத்திநாதரின் நேரடித் தலையீட்டால் உரோமையில் 11 ஆயிரத்திற்கு அதிகமான யூதர்கள் காப்பாற்றப்பட்டனர் என்று வரலாற்று ஆசிரியர்கள் அண்மையில் கண்டுபிடித்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
உரோமையிலுள்ள ஜெர்மன் தேசிய ஆலயமான Santa Maria dell Anima ஆலயத்தின் பொதுசுவடிக்கூடத்தில் ஆய்வு செய்த போது பல மிக முக்கியமான ஆவணங்களைக் கண்டுபிடித்ததாக, Pave the Way அமைப்பின் ஜெர்மனிக்கானப் பிரதிநிதி Michael Hesemann கூறினார்.
இந்த ஆவணங்களில், இரண்டாம் உலகப் போரின் போது திருத்தந்தை 12ம் பத்திநாதரின் நேரடித் தலையீட்டால் உரோமையில் 11 ஆயிரத்திற்கு அதிகமான யூதர்கள் காப்பாற்றப்பட்டது குறித்த விவரங்கள் இருப்பதாக Hesemann கூறினார்.
போலந்தின் ஆஷ்விஷ் வதைப்போர் முகாமில் சேர்ப்பதற்க்கென, 1943ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி உரோமையில் 1007 யூதர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து இரயிலில் அனுப்பப்பட்டனர் என்றும், அச்சமயம் திருத்தந்தை 12ம் பத்திநாதர் அமைதி காத்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
ஆயினும் தற்போதைய புதிய கண்டுபிடிப்புக்களின்படி, திருத்தந்தை 12ம் பத்திநாதர், அந்தக் கைதுகளைத் தடுத்து நிறுத்துவதற்கு அன்று பிற்பகல் 2 மணிக்கு நேரடியாகச் செயல்பட்டார் எனவும், அவரின் முயற்சி பலனற்றுப் போனது எனவும் தெரியவந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.