2011-07-23 15:46:39

ஜூலை 24, வாழ்ந்தவர் வழியில்...


1953ம் ஆண்டு இத்தாலியின் பதுவை நகரில் பிறந்தவர் Ezechiele Ramin. இவர் பள்ளியில் படிக்கும்போதே, உலகின் பல நாடுகளில் பரவிக்கிடந்த வறுமையைப் பற்றி சிந்தனைகளை வளர்த்தவர்.
1972ம் ஆண்டு கொம்போனி மறைபரப்புப் பணியாளர்கள் சபையில் துறவு வாழ்வை மேற்கொண்டார். 1984ம் ஆண்டு Brazil நாட்டில் சிறு விவசாயிகள் மத்தியில் தன் பணியை ஆரம்பித்தார். பெரும் பண்ணை முதலாளிகளால் ஏமாற்றப்பட்டு வந்த சிறு விவசாயிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல், ஆலோசனை வழங்குதல் என்று துணிவுடன் உழைத்தார். அவ்வப்போது இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. 1985ம் ஆண்டு பண்ணை முதலாளிகளுக்கு எதிராக, சிறு விவசாயிகள் ஆயுதம் தாங்கிப் போரிடுவது என்று தீர்மானித்தபோது, அருள்தந்தை Ramin அந்த முயற்சியைத் தடுக்க பாடுபட்டார்.
அதே ஆண்டு ஜூலை 24ம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த ஏழு பேர் இவரை 50 முறை சுட்டதில் இவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தன்னைச் சுட்டவர்களை நோக்கி, "உங்களை நான் மனதார மன்னிக்கிறேன்." என்று சொல்லியபடி அருள்தந்தை Ramin உயிர்துறந்தார் என்று சொல்லப்படுகிறது.
இவரது உடல் பதுவை நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இவரது படுகொலையைக் கேள்விபட்டதும் அப்போது திருத்தந்தையாய் இருந்த அருளாளர் இரண்டாம் ஜான் பால் இவரை பிறரன்பின் ஒரு மறைசாட்சி என்று புகழ்ந்தார்.
கவிதை, ஓவியம் ஆகிய கலைத் திறமைகள் பெற்ற அருள்தந்தை Ezechiele Ramin வரைந்த ஓவியங்கள் 2010ம் ஆண்டு பதுவை நகரில் ஒரு கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன. இவர் எழுதிய கடிதங்கள், கவிதைகள் ஆகியவற்றைத் தொகுத்து நம்பிக்கைக்கு ஒரு நற்சாட்சி 1971-1985 (Witness of Hope 1971-1985) என்ற நூல் வெளியிடப்பட்டது.







All the contents on this site are copyrighted ©.