2011-07-22 15:59:10

திருச்சபை இளையோரின் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் – திருப்பீட அதிகாரி


ஜூலை 22,2011. இளையோருக்கு நற்செய்தி அறிவிப்பதற்கு அவர்களின் கலாச்சாரத்தில் மேலோங்கி நிற்கும் சுதந்திரம், அறிவியல் ஆகிய விழுமியங்களைத் திருச்சபை புரிந்து கொள்ள வேண்டுமென்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிப்பதற்கானத் திருப்பீட அவைத் தலைவர் கூறினார்.
“இளையோரும் கத்தோலிக்கத் திருச்சபையும் : இன்றைய இளையோர்ப் பணிக்கான உதவிகள்” என்ற தலைப்பில் மத்ரித் அரசர் ஹூவான் கார்லோஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் கோடை விடுமுறைப் பயிற்சியில் உரையாற்றிய பேராயர் Rino Fisichella, இளையோர் மத்தியிலான பணி குறித்து விளக்கினார்.
இளையோரிடம் சுதந்திரம் பற்றிப் பேசாமல் எவரும் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றிப் பேச முடியாது, ஏனெனில் இக்கால இளையோர் தங்களது கலாச்சாரத்தைச் சுதந்திரத்தில் வைத்துள்ளார்கள் என்று பேசினார் பேராயர்.
சுதந்திரம், எப்பொழுதும் உண்மையோடு தொடர்பு கொண்டது, உண்மையே சுதந்திரத்தைப் பிறப்பிக்கின்றது என்றும் பேசிய அவர், திருச்சபை அறிவியலுக்குச் சாதகமாக இருக்கின்றது என்றார்.
வருகிற ஆகஸ்ட் 18 முதல் 21 வரை மத்ரித்தில் திருத்தந்தை பங்கு கொள்ளும் உலக இளையோர் தினம் நடைபெறவிருக்கின்றது. இதில் சுமார் 10 இலட்சம் இளையோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.