2011-07-22 15:07:18

ஜூலை 23. வாழ்ந்தவர் வழியில் ....


இந்தியத் தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியும், விடுதலைப் போராட்ட வீரருமான லோகமான்ய பால கங்காதர திலகர் மகராஷ்டிராவில் ரத்தினகிரி எனுமிடத்தில் 1856ம் ஆண்டு ஜூலை 23ந்தேதி பிறந்தார். இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது.
முதலில் பூனாவில் இருந்த ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியில் சேர்ந்த திலக் பின்னர் ஒரு பத்திரிகையாளர் ஆனார். இவர் மேலைநாட்டுக் கல்வி முறையைக் கடுமையாகச் சாடி வந்தார். இவர் இந்திய இளைஞர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காகத் தக்காணக் கல்விச் சபையை நிறுவினார்.
“என் நாடு அடிமைப்பட்டுக் துன்புற்றுக் கிடக்கின்றது. சுதந்திர தாகத்தால் தவிக்கும் என் மக்கள் அன்னிய ஆதிக்கத்தால் சட்டமல்லாத சட்டத்தின் கீழ் அடிக்கடி கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு வாடுகின்றனர். என் மக்களையும், தேசத்தையும் காப்பாற்றவேண்டுமானால் நான் சட்ட நுணுக்கங்களையெல்லாம் கற்ற சட்ட நிபுணனாகவேண்டும்” என இவர் கொண்டிருந்த வைராக்கியத்தின்படியே சட்ட வல்லுனராகிப் பல தேச பக்தர்களுக்காக வாதாடி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டார். தன் நாட்டு மக்கள் மனத்தில் சுதந்திரக் கனலை மூண்டெரியச் செய்தார்.
இவர் துவக்கிய "கேசரி" என்ற மராத்தி மொழிப் பத்திரிகை, மற்றும் "மராட்டா" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கங்கள் பிரித்தானியர்களின் கீழ் மக்கள்படும் துன்பங்கள் குறித்ததாகவே இருந்தன. இந்தப் பத்திரிகைகள், ஒவ்வோர் இந்தியனையும் தமது உரிமைகளுக்காகப் போராடும்படி தூண்டின.
லோகமான்ய பால கங்காதர திலகர் தன் 64ம் வயதில் 1920ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி மும்பையில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.