2011-07-22 16:00:01

உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்காக கேரளாவில் 101 நாள்கள் இடைவிடாமல் செபமாலை


ஜூலை 22,2011. உலகின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கும் திருச்சபையின் தூய்மையான வாழ்வுக்குமென கேரளாவின் தாமரச்சேரி மறைமாவட்டம் 101 நாள்கள் இடைவிடாமல் செபமாலை செபிக்கும் பக்தி முயற்சியை இவ்வியாழனன்று தொடங்கியுள்ளது.
கேரளாவின் தாமரச்சேரி மறைமாவட்டத்தின் பெத்தானியா புதுப்பித்தல் மையத்தில் இப்பக்தி முயற்சியைத் தொடங்கி வைத்தார் அம்மறைமாவட்ட ஆயர் Remigious Inchananiyil.
மேலும், இப்பக்திமுயற்சி குறித்துப் பேசிய அம்மையத்தின் இயக்குனர் அருட்பணி James Kiliyananickal, இந்த உலகம் நற்செய்திக்காகத் தாகம் கொண்டுள்ளது என்றார். இச்செப வழிபாட்டில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொள்வார்கள் என்றும் அக்குரு தெரிவித்தார்.
இது, உலகப் போக்கால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள இக்கால உலகிற்கு நற்செய்தி அறிவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
வருகிற அக்டோபர் 29 வரை நடைபெறும் இச்செபமாலை வழிபாட்டில் தாமரச்சேரி மறைமாவட்டத்தின் 117 பங்குகளிலிருந்து இரவும் பகலும் தொடர்ச்சியாகக் கத்தோலிக்கர் கலந்து கொள்வார்கள். இந்நாட்களில் ஒப்புரவு அருட்சாதனமும் உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
தாமரச்சேரி மறைமாவட்டத்தில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இத்தகைய மாரத்தான் செபமாலை பக்தி முயற்சி நடத்தப்பட்டு வருகிறது.







All the contents on this site are copyrighted ©.