2011-07-21 16:22:44

மக்களிடமிருந்து அரசு விலகிப்போனதே போராட்டங்களுக்கான காரணம் என்கிறது மலாவித் திருச்சபை


ஜூலை 21, 2011. மலாவி நாட்டின் முக்கிய நகரங்களில் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் இடம்பெறுவதற்கான முக்கியக் காரணம், அந்நாட்டு மக்களிடமிருந்து அரசு விலகிப் போனதேயாகும் என்கின்றனர் மலாவித் தலத்திருச்சபைத் தலைவர்கள்.
எரிசக்தி எண்ணெய் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்கள் போராடி வருகின்றபோதிலும், போராட்டத்திற்கான உண்மைக் காரணம், மக்களின் குரலுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பதேயாகும் என்றார் மலாவி ஆயர் பேரவையின் பொதுச்செயலர் குரு ஜார்ஜ் புலேயா.
தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள அரசு தயாராக இல்லை எனவும் குற்றஞ்சாட்டினார் அவர்.
இதற்கிடையே, மக்கள் வன்முறைகளிலிருந்து ஒதுங்கி நிற்கவேண்டும் என, மலாவித் திருச்சபையும் கிறிஸ்தவ சபைகளின் அவையும் இணைந்து அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் ஏழைநாடுகளுள் ஒன்றான மலாவியில் 75 விழுக்காட்டு மக்கள், ஒரு நாளைக்கு ஒரு டாலருக்கும் குறைவான வருமானத்திலேயே வாழ்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.