2011-07-20 16:39:19

புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் எருசலேமில் தொடர்ந்து வாழ உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் - கர்தினால் தொரான்


ஜூலை20,2011. புனிதபூமியில் “பகிர்ந்து வாழும் ஓர் எதிர்காலத்தைக்” கட்டி எழுப்புவதற்கு அப்பகுதியின் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் முஸ்லீம்கள், உரையாடலில் ஈடுபடுமாறு திருப்பீட அதிகாரி ஒருவர் இச்செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டார்.
“புனிதபூமியில் கிறிஸ்தவர்கள்” என்ற தலைப்பில், இங்கிலாந்தின் லாம்பெத் மாளிகையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில், திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய, திருப்பீட பல்சமய அவையின் தலைவர் கர்தினால் ஜான்-லூயி தொரான் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
“ஓரேயோர் எதிர்காலம், அதுவும் பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலம் ஒன்றுதான் இருக்கின்றது” என்பதை மதம் போலவே வரலாறும் நமக்குப் போதிக்கின்றது என்று கூறினார் கர்தினால் தொரான்.
புனிதபூமிக் கிறிஸ்தவர்களுக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றுரைத்த கர்தினால், யூதர்கள் மற்றும் முஸ்லீம்களைப் போன்றே, கிறிஸ்தவர்களுக்கும் எருசலேம் புனித நகரம் மட்டுமல்ல, அது அவர்களின் பூர்வீக நகரமுமாகும், அங்கு அவர்கள் தொடர்ந்து வாழவும் வேலை செய்யவும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.
புனிதபூமிக் கிறிஸ்தவர்கள் குறித்த இந்தக் கருத்தரங்கு, இங்கிலாந்து ஆங்லிக்கன் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்களால் நடத்தப்பட்ட முதல் நிகழ்வாகும். இது, புனிதபூமியின் பிறரன்பு நண்பர்கள் என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கிறிஸ்தவ, யூத மற்றும் இசுலாம் மதங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்வமைப்பு பெத்லகேமில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்துகிறது. மேலும், வேலை வாய்ப்பை, சிறப்பாக இளையோர்ககு வேலைவாய்ப்பை வழங்கும் புதிய தொழில்களையும் ஊக்குவிக்கின்றது. உணவு மற்றும் மருந்துகளையும் விநியோகம் செய்கின்றது.







All the contents on this site are copyrighted ©.