2011-07-19 16:31:28

விவிலியத்தேடல் – கடவுளது பேரன்பில் நிலையான நம்பிக்கை - திருப்பாடல் 52


ஜூலை19,2011. ம RealAudioMP3 ும்பையில் கடந்த புதன் (ஜூலை 13) மாலை மூன்று இடங்களில் குண்டு வெடிப்புகள். அதுவும் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில்.. இதில் 18 பேர் அந்த இடங்களிலே மடிந்தனர். 140க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இதே மும்பையில் கடந்த பத்து ஆண்டுகளில் 13 தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் 501 பேர் பலியாகியிருக்கின்றனர். பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்புகள். இவற்றில் 24 மணி நேரத்திற்குள் 13 பேர் பலி. இந்த ஜூலை 9ம் தேதிதான் உலகின் 193வது நாடாக தென் சூடான் பிறந்தது. ஆனால் சூடான் மாநிலமான தென்கோர்டோஃபானில் தொடர்ந்து கடும் மோதல்கள். சுமார் நூறு அப்பாவி பொதுமக்கள் கூட்டாகப் புதைக்கப்பட்டுள்ளனர். சிரியாவில், லிபியாவில் என இந்நாட்களில் வன்முறைகள் தொடருகின்றன. இந்த மாதிரி மனித உயிர்கள் இரத்தத்தில் மிதப்பதைக் கேட்கும் போது ஏன் இந்தக் கொடுமைகள்!, எப்படி இந்தக் கொடுஞ்செயல்களைச் செய்ய முடிகின்றது?, இவ்வளவு கல்நெஞ்சர்களாக மனிதர் இருக்க முடியுமா? என்ற கேள்விகள் வந்து கொண்டே இருக்கின்றன. அன்பு நேயர்களே, உங்களுக்கும் இவை போன்ற பல கேள்விகள் எழலாம். திருப்பாடல் 52லும் அந்தப் பாடல் ஆசிரியர் எடுத்த எடுப்பிலே இதேபோல்தான் கேள்வி கேட்கிறார்.
“வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்? கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்!”
இந்த வலியோன், கொடுமை செய்பவன், தீயோன் என்று அர்த்தமாகும். “வலியோனே! தீமை செய்வதில் ஏன் பெருமை கொள்கிறாய்? கேடுவிளைவிக்க நீ திட்டமிடுகின்றாய்!” இப்படிக் கேட்பதற்கு ஒரு பின்னணி இருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் மன்னன் சவுல், தாவீதைக் கொல்லத் தேடினார். அதனால் தாவீது சவுலிடமிருந்து தப்பித்துச் சென்றார். செல்லும் வழியில் நோப் நகரிலிருந்த குரு அகிமெலக்கிடம் உதவியும் ஆலோசனையும் பெறுவதற்குச் சென்றார். குரு அகிமெலக் தாவீதுக்கு உணவு கொடுத்ததோடு, தாவீது வீழ்த்திய கோலியாத்தின் வாளையும் தற்காப்புக்காகக் கொடுத்து அனுப்பினார். தோயேகு என்பவன் இச்செயலைப் பார்த்துவிட்டான். இவன் சவுலின் “இடையர்களுக்குத் தலைவன்”. எனவே தோயேகு, குரு அகிமெலக் தாவீதுக்கு உதவியதைச் சவுலிடம் போட்டுக் கொடுத்தான். தனது எதிரிக்கு உதவிய குரு அகிமெலக், அவரது குடும்பத்தினர் என அனைவரையும் கொன்று குவிக்குமாறு சவுல் கட்டளையிட்டார். தோயேகுவும் உடனடியாக தனது மன்னரின் ஆணையை நிறைவேற்றினான். நோப் நகரில் குரு அகிமெலக், அவரது குடும்பத்தினர், அங்கிருந்த குருக்கள் என எண்பத்தைந்து பேரையும், அந்நகரின் ஆண்,பெண், சிறுவர், குழந்தைகள், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றையும் வாளால் வெட்டி வீழ்த்தினான். (1சாமு.22,18-22). இந்தத் தீய செயலைச் செய்த தீயோனாகிய தோயேகுவைக் கேள்வி கேட்டுப் புலம்புகிறார் தாவீது.
“நரம்பில்லா நாவுடையோனே, உனது நா தீட்டிய கத்தி போன்றது. வஞ்சகத்தில் சேர்ந்தோன் நீ அன்றோ! நன்மை செய்வதைவிட தீமை செய்வதையே விரும்புகின்றாய். உண்மை பேசுவதைவிட பொய் பேசுவதையே விரும்புகின்றாய். நரம்பில்லா நாவுடையோனே! நீ விரும்பும் சொற்கள் அனைத்தும் கேடு விளைவிப்பனவே! ஆகவே கடவுள் உன்னை என்றும் மீளாதபடி நொறுக்கி விடுவார் உன்னைத் தூக்கி எறிவார்....... “ (திருப்பாடல் 52 : 1-5)
திருப்பாடல் 52ல், தோயேகு காட்டிக் கொடுத்தது, அவன் வெறித்தனமாகக் கொலை செய்தது என அவனின் அனைத்துத் தீமைகளையும் அந்தத் தீமைகளின் உக்கிரத்தை நினைத்து தாவீது மனது வெதும்புகிறார். எவ்வளவு இதயமற்ற, துணிச்சலான, வெட்கமற்ற செயல் என்று திருப்பாடல் 52ல் கலங்குகிறார்.
விவிலியத்தில், நரம்பில்லா நாவுடையவர் என்பது, ஏமாற்று வேலைகளையும் (மீக்.6:11, ஆமோ.8:5)சூழ்ச்சிகளையும் செய்பவர்கள், பொய் பேசுபவர்கள், பொய்சாட்சி சொல்பவர்கள் (நீ.மொ.12:17) என்று அர்த்தமாகும். திருப்பாடல் 52ல் குறிப்பிடப்படும் தீயவன், ஒரு தனிமனிதனாகவோ அல்லது ஒரு குழுவாகவோ அல்லது புறநாட்டு எதிரியாகவோ அல்லது உள்நாட்டுப் பணமூட்டைகளாகவோ இருக்கலாம் என்று விவிலிய அறிஞர்கள் சொல்கிறார்கள்.
தீயவன், செல்வப் பெருக்கில் நம்பிக்கை வைக்கின்றான், இவன் அழிவுச்செயலையே புகலிடமாகக் கொண்டவன், இவன் கடவுளைத் தன் புகலிடமாகக் கொள்ளாதவன் என வசனம் 7ல் திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். இங்கு செல்வப்பெருக்கு என்பது, பணத்தை மட்டும் குறிப்பதல்ல, சதி, நம்பிக்கைத் துரோகம், தற்பெருமை ஆகியவற்றையும் சுட்டும். நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித் திட்டங்களில் தாங்களே வீழ்வார்கள் என்று நீதிமொழிகள் 11,6 சொல்கிறது. தீயவர்கள் முதலில் தேர்வு செய்வது இரத்தம். இவர்களது திட்டங்களில் இரக்கமோ, கனிவோ இருக்காது. தடித்த தோலையும் கல்நெஞ்சத்தையும் கொண்டவர்கள். கடவுளைத் தம் சொந்த வாழ்க்கையினின்று ஒதுக்கி வைப்பவர்கள். அப்படியிருந்தால் மட்டுமே அவர்களால் உயிர்களைக் கொன்று குவிக்க முடியும். இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது நடந்த கொடூரங்களை நடத்திய துப்பாக்கி மனிதரின் ஏளனப் பேச்சுக்களையும் செயல்களையும் YouTube ல் பார்த்த போது கொடுமை செய்வோரின் கடின இதயத்தையும், இரத்த வெறிச்செயலையும் ஊகிக்க முடிகிறது. கண்களையும் கைகளையும் கட்டி வெற்று உடம்புடன் மனிதரைத் தள்ளிக்கொண்டு வந்து துப்பாக்கியால் ஈவு இரக்கமின்றி சுட்டதை ஒளிக்காட்சியில் காண நேர்ந்த போது இந்தத் திருப்பாடல் ஆசிரியர் போன்றுதான் கேட்கத் தோன்றியது.
ஏன் நாம் கடந்து வந்துள்ள இந்த 20ம் நூற்றாண்டில்தான் மனித சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய தீமைகள் நடந்துள்ளன!. கம்யூனிசத்தின் மிகுந்த வல்லமை வாய்ந்த தலைவரான இரஷ்யாவின் ஸ்டாலின் இரண்டு கோடி மக்களின் இறப்புக்குக் காரணமானவர். சீனாவில் மாவோ ஆட்சியில் வன்முறைக்கும் பசிக்கும் பலியானோர் சுமார் ஏழு கோடி. ஹிட்லரின் மனிதமற்ற கொள்கைகளால் மடிந்தோர் சுமார் ஒரு கோடி. கம்போடியாவின் போல்பாட் மற்றும் அவரது பரந்துபட்ட கம்யூனிசத்தால் இறந்தோர் சுமார் 25 இலட்சம். ருவாண்டா இனப்படுகொலையில் மாண்டோர் எட்டு இலட்சத்துக்கு அதிகம். இவற்றையெல்லாம் கேட்கவே நெஞ்சுக்குலை நடுங்குகிறதுதானே!.
தீமை செய்பவன் இறுதியில் அழிவையே வெகுமதியாகப் பெறுவான், கடவுளைத் தனது புகலிடமாகக் கொள்ளாத இவன், கடவுளின் தண்டனைக்கு உட்படுவான், இவனைக் கண்டு நல்லவர் நகைப்பர் என்றும் சொல்கிறது திருப்பாடல் 52. ஹிட்லர் தனது உயிரை தானே துப்பாக்கியால் மாய்த்துக் கொண்டார். ஆனால் நேர்மையாளர் தாங்கள் துன்பங்களால் புடமிடப்படும் போது அதை எதிர்த்து நிற்பதால் இறுதியில் இன்பம் அனுபவிப்பார்கள் என்றும் இந்தத் திருப்பாடலில் வாசிக்கிறோம். நீதிமான் யோபுவின் வாழ்க்கையும் இதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆண்டவர் யோபுவின் முன்நிலைமையைக் காட்டிலும் பின் நிலைமையை மிகுதியாய் ஆசீர்வதித்தார் என்று யோபு நூல் 42,12 சொல்கிறது. நேர்மையாளர் கடவுளில் ஆழமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் கடவுள் பயத்தோடு வாழ்கிறார்கள். அதனால் கடவுளுக்கு விருப்பமில்லாதச் செயல்களைச் செய்யாமல் இருக்கிறார்கள். திருப்பாடல்23,4லும் இதனைத்தான் செபிக்கிறோம்.
“சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் ஆண்டவரே நீர் என்னோடு இருப்பதால் நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்”
அமெரிக்க ஐக்கிய நாட்டு உயர் இராணுவ அதிகாரி Jim Stockdale வியட்நாம் போரின் போது கைது செய்யப்பட்டு எட்டு ஆண்டுகள் சிறைவாழ்வு அனுபவித்தவர். அந்த வாழ்க்கையில் தொடர் சித்ரவதைகளை அனுபவித்ததால் ஒழுங்காக அவரால் நடக்க முடியாது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியுயார்க் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பின்னர் Jim Stockdale அந்தச் சிறை வாழ்க்கை பற்றி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். தனது சிறை வாழ்வு பற்றி அவர் விளக்கிய போது, இறுதி முடிவு குறித்துத் தான் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை அழுத்தமாகத் திருப்பித் திருப்பிச் சொன்னார். அது எப்படி சாத்தியமானது என்று கேட்டதற்கு, அது மிகவும் எளிதானது. காரணம் தான் ஒரு ஆப்டிமிஸ்ட் என்றார். எதிலும் நல்லதே நடக்கும் என்ற இனியமனம் கொண்ட ஆப்டிமிஸ்ட்டுகளால் அவ்வாறு வாழ இயலும். யாரும் ஒருபொழுதும் விசுவாசத்தை மட்டும் இழக்கக் கூடாது என்று பேட்டியின் முடிவில் கூறியிருந்தார்.
ஆம். கடவுளின் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளவர்கள், பச்சை ஒலிவமரக்கன்று போல் இருப்பார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்தைக் கையிலெடுக்குமுன்னர் 1933ல் ஜெர்மன் வானொலியில் ஹிட்லருக்கு எதிராகப் பேசியவர் ஜெர்மன் லூத்தரன் சபை போதகர் Dietrich Bonhoeffer. இவர் புகழ் பெற்ற எழுத்தாளராகவும் இருந்தார். இந்த இளம் போதகர் பின்னர் கைது செய்யப்பட்டு 1945ல் தூக்கிலிடப்பட்டார். இவர் இறந்த பின்னர் இவர் சிறையில் இருந்த போது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்களைத் தொகுத்து, “Letter and Papers from Prison?” என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியானது. அதில் அவர் எழுதியுள்ள ஒரு கவிதை அனைவரது உள்ளத்தைத் தொட்ட ஒன்றாகும். அதில், தனது சிறை வாழ்வில் வார்த்தையால் விவரிக்கமுடியாத தீமைகள் மத்தியில் தான் எதிர்கொண்ட பயம், தைரியம், விசுவாசம் ஆகியவற்றை விளக்கியிருக்கின்றார். நான் யார்? என்ற கேள்வியை ஒவ்வொரு சரணத்திலும் கேட்டுள்ள Bonhoeffer, இறுதியில் நான் யாராக இருந்தாலும், ஓ கடவுளே, உமக்குத் தெரியும் நான் உமக்கு உரியவன் என்று பதில் சொல்லியிருக்கிறார்.
ஆம். அன்பு நெஞ்சங்களே, நீதிமான்கள், கேடுகாலத்தில் இகழ்ச்சி அடைவதில்லை(37:19). கிறிஸ்தவர்கள் தீமைக்கு எதிரான எல்லாப் போராட்டங்களிலும் முன்வரிசையில் நிற்கின்றனர். கடவுளுக்கு அஞ்சி அவரில் அசையாத நம்பிக்கை வைத்து வாழ்பவர்கள் நேர்மையாளராய் இருப்பார்கள். இவர்கள் தீமையின் பாதையில் செல்லமாட்டார்கள். தீய சக்திகளோடு உறவு வைக்கமாட்டார்கள்(119:101). அந்தச் சோதனை நேரங்களில் கடவுளிடம் மன்றாடுவார்கள்(141:4). இவர்கள் தீமையை வெறுப்பதோடு மட்டுமல்லாமல்(97:10), தீமையை நன்மையால் வெல்வார்கள் (34:14).
அன்பர்களே, கடவுள் தம்மைப் புகலிடமாய்க் கொள்ளும் மக்களை எல்லாத் தீமைகளிலிருந்தும் (121:7), தீயவர்களினின்றும்(97:10) காப்பார். எதிரிகள் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே திருப்பி விடுவார் (54:5). இவ்வாறு திருப்பாடல்கள் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றன.
ஆதலால் ஆண்டவரில் அசையாத நம்பிக்கை வைத்து, கடவுளுக்கு விருப்பமில்லாதத் தீய செயல்களையும் தீயவர்களையும் விட்டு விலகி வாழ உறுதி எடுப்போம்.








All the contents on this site are copyrighted ©.