2011-07-19 16:38:07

சூடான் மோதல்கள், அமைதிக்கான அச்சுறுத்தல்கள் என்கிறது கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு


ஜூலை 19, 2011. சூடானுக்கும் புதிய நாடான தென் சூடானுக்கும் இடையே எல்லைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மோதல்கள் அமைதிக்கானப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், கோவில்கள் திட்டமிட்டுத் தாக்கப்படுவதாகவும் கவலையை வெளியிட்டுள்ளார் கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பு ஒன்றின் தலைவர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதியான தென் கோர்டோஃபானில் பல ஆயிரக்கணக்கான மக்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் என்றுரைத்த Church in Need என்ற பிறரன்பு அமைப்பின் இங்கிலாந்து இயக்குனர் Kyrke Smith, அப்பாவி மக்களும் கிறிஸ்தவக் கோவில்களும் திட்டமிட்டு தாக்கப்பட்டு வருவது கவலை தருவதாக உள்ளது என்றார்.
சூடானின் இசுலாமிய அரசு கடந்த காலங்களில் தென்பகுதி சிறுபான்மை மதத்தவர் மீது நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்துவதாக தற்போதைய தாக்குதல்கள் உள்ளன என்றார் அவர்.
நிலையான ஓர் அமைதியைப் பெறும் நோக்கில் சூடான் மற்றும் தென் சூடான் நாடுகளின் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசவேண்டிய கடமை சர்வதேச சமுதாயத்திற்கு உள்ளது என்பதையும் நினைவுறுத்தினார் Smith.








All the contents on this site are copyrighted ©.