2011-07-19 16:36:44

கிழக்கு ஆப்ரிக்காவில் பசிச்சாவை எதிர்கொள்ளும் சுமார் ஒரு கோடி மக்களுக்கு உதவிக்காக அழைப்பு


ஜூலை19,2011. கிழக்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பசிச்சாவை எதிர்கொள்ளும் சுமார் ஒரு கோடி மக்களுக்கான உதவிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது பிரிட்டனை மையமாகக் கொண்ட கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனம்.
வெளிநாட்டு வளர்ச்சிக்கான இக்கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவன இயக்குனர் Geoff O'Donoghue வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், இம்மக்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையான சுத்தமான நீர், மருந்து மற்றும் உணவுக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்தார்.
கென்யா, எத்தியோப்பியா, சொமாலியா, தென் சூடான் ஆகிய நாடுகளில் இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி, தங்கள் வாழ்நாளில் இதுவரைக் கண்டிராத நிலையாக இருக்கின்றது என்று அப்பகுதியில் பணியாற்றும் இடர்துடைப்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
கென்யாவின் தாதாப்பிலுள்ள மூன்று அகதிகள் முகாம்களுக்குத் தினமும் 1300 பேர் வீதம் வருவது அம்முகாம்களின் கொள்ளளவிற்குச் சவாலாக இருக்கின்றது என்றார் O'Donoghue.
அம்முகாம்கள் 90,000 பேருக்கென அமைக்கப்பட்டன, ஆனால், தற்சமயம் அவற்றில் 3,80,000 அகதிகள் வாழ்கின்றனர் என்றார் அவர்.
2010ன் இறுதியிலும் 2011லும் மழை இல்லாததால் இவ்வறட்சி ஏற்பட்டுள்ளது என்றார் O'Donoghue.








All the contents on this site are copyrighted ©.