2011-07-18 16:57:59

ஜூலை 19 வாழ்ந்தவர் வழியில் .....


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 1892ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி பிறந்தவர் மயில்வாகனன் என்ற சுவாமி விபுலானந்தர். இவர் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்த புலவர். மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று, பண்டிதர் பட்டத்தையும் பெற்றவர். சுவாமி விபுலானந்தரே இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவராவார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக 'யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம்' என்ற கழகத்தை அமைத்து தமிழை வளர்க்கலானார். இந்தச் சங்கத்தின் மூலம் பிரவேசப் பண்டிதர், பாலபண்டிதர், பண்டிதர் என மூன்று தேர்வுகளை ஏற்படுத்தினார். மயில்வாகனனாரின் இந்த முயற்சி எத்தனையோ பண்டிதமணிகளை நாட்டிற்கு அளித்துள்ளது. துறவு மீது பற்று வந்து ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார். இராமகிருஷ்ண மிஷன் நடத்திய இராமகிருஷ்ண விஜயம் என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும், Vedanta Kesari என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராக இருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதத் தேர்வின் கண்காணிப்பாளாராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான செந்தமிழ் எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். 1924ஆம் ஆண்டு சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.
1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களை வகுத்தார்.
சுவாமி விபுலாநந்தர் 1947 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் அமரத்துவம் அடைந்தார். இலங்கையிலுள்ள பள்ளிகளில் கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினத்தன்றே கொண்டாடப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.