2011-07-16 15:32:09

ஜூலை 17, வாழந்தவர் வழியில்...


மனித வரலாற்றில் பல்வேறு காரணங்களுக்காக அத்துமீறிய அக்கிரமங்கள் நிகழ்ந்துள்ளன. நாடுகள் என்ற எல்லையைத் தாண்டி, மனித குலத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் என்று இவை சுட்டிக் காட்டப்படுகின்றன.
யூதர்கள் என்ற இனத்தையே வேரோடு அழிக்கும் ஒரு முயற்சியாக ஹிட்லர் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் மனித குலத்திற்கு எதிரான ஒரு குற்றம். ஹிட்லர் இப்போது உயிரோடு இருந்தால், உலக நாடுகளின் குற்றப்பிரிவு (கிரிமினல்) நீதி மன்றத்திற்கு (International Criminal Court) முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டிருப்பார்.
கம்போடியாவில் 1975 முதல் 1979 வரை பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த Khmer Rouge என்ற அமைப்பினர் இந்த நீதி மன்றத்திற்குக் குற்றவாளிகளாய் கொண்டு வரப்பட்டிருப்பார்கள்.
ஈராக்கின் முன்னாள் அரசுத் தலைவர் சதாம் ஹுசேன் பிடிபட்டபோது, இந்த நீதிமன்றத்திற்கு முன் அவர் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கருத்து நிலவியது.
ஒவ்வொரு நாட்டின் அரசும் தனித்து, சுயமாகத் தங்களை ஆள்வதற்கும், நாட்டிற்குள் குற்றம் புரிவோரைத் தண்டிக்கவும் அதிகாரம் பெற்றுள்ளன. ஆனால், ஒரு நாட்டின் அரசே, அல்லது ஒரு நாட்டின் அரசுத் தலைவரே மக்களுக்கு எதிராக வன்முறைகளை அத்துமீறி கையாளும்போது, அந்த அரசு அதிகாரிகள், அரசுத் தலைவர் ஆகியோரைத் தண்டிக்க உலக அளவில் ஒரு நீதிமன்றம் தேவை என்பதை உலக நாடுகள் உணர்ந்தன.
இந்த விழிப்புணர்வின் விளைவாக 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி உலக நாடுகளின் குற்றப்பிரிவு நீதி மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வையொட்டி, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17 அனைத்துலக நீதி நாள் (World Day for International Justice, also referred to as International Justice Day) என்று கொண்டாடப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.