2011-07-16 15:23:22

கோர் ஊனும் திருப்பீட அவை சொமாலியாவிற்கு எழுபதாயிரம் டாலரை அனுப்புகிறது


ஜூலை 16,2011. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியா நாடு மீது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டுள்ள அக்கறை மற்றும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக அந்நாட்டிற்கு எழுபதாயிரம் டாலரை அனுப்புகிறது கோர் ஊனும் என்ற திருப்பீட பிறரன்பு அவை.
Mogadishu வில் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக இருக்கும் Djibouti ஆயர் Giorgio Bertin க்கு இந்நிதியுதவியை அனுப்பியுள்ளது இத்திருப்பீட அவை.
மேலும், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சொமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளுக்குப் பிரிட்டனும் 5 கோடியே 22 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகளை அனுப்புவதற்கு உறுதியளித்துள்ளது.
இந்த நிதியுதவியானது, சொமாலியாவில் புரதச்சத்தின்மையால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சுமார் எழுபதாயிரம் சிறார் உட்பட அந்நாட்டின் ஐந்து இலட்சம் பேருக்கும் வழங்கப்படும் என்று பிரிட்டன் சர்வதேச வளர்ச்சித்துறை அறிவித்தது.
தென் சொமாலியாவில் உணவு உதவிகள் செல்வதற்கு இசுலாம் தீவிரவாதிகள் தடையாக இருப்பதால் அப்பகுதியில் உணவுப் பஞ்சம் கடுமையாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தில் தற்சமயம் ஒரு கோடிப் பேர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக உணவுத் திட்ட அமைப்பு அறிவித்தது.







All the contents on this site are copyrighted ©.