2011-07-15 16:01:06

மும்பை குண்டு வெடிப்புக்களுக்கு இந்திய ஆயர்கள் கண்டனம்


ஜூலை15,2011. மும்பையில் இப்புதன் மாலை மூன்று இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்துள்ளதையொட்டி தங்களது கடுமையான கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர் இந்திய கத்தோலிக்க ஆயர்கள்.
மும்பையின் தெற்குப் பகுதியில் ஜவேரி பஜார் மற்றும் ஓபரா ஹவுஸ் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புக்கள், நடுத்தரமான மற்றும் சக்திவாய்ந்த குண்டுகள் என்றும், தாதரில் நடந்த குண்டுவெடிப்பு மிதமானது என்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஒரு நபரையும் சேர்த்து, இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 18 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 140க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் சிதம்பரம் தெரிவித்தார்.
இப்பயங்கரவாத நிகழ்வை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட இந்திய ஆயர்கள், இந்நேரத்தில் நாட்டின் பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கையில் நாட்டினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுடனானத் தங்களது தோழமையுணர்வையும் இந்திய ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்த ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இப்பயங்கரவாதச் செயல்கள், உலக நாடுகளின் அமைதிக்கும் இறையாண்மைக்கும் பெரும் சவாலாக உள்ளன என்றார்.
மேலும், நோக்கம் எதுவாக இருந்தாலும் இப்பயங்கரவாதத்தை ஒருபோதும் ஏற்க முடியாது, இது ஒரு பெரும் குற்றச்செயல் என்றார் பான் கி மூன்







All the contents on this site are copyrighted ©.