2011-07-15 14:36:01

ஜூலை 16. வாழ்ந்தவர் வழியில் ....


டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919 மார்ச் 28ல் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவரது இயற்பெயர் அலமேலு என்பதாகும். அவருடன் உடன்பிறந்த மூன்று சகோதரர்கள் டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே. ஜெயராமன் ஆகியோரும் சிறந்த பாடகர்கள். புகழ் பெற்ற பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
1929 ஆம் ஆண்டில் தனது 10வது வயதில் முதற்தடவையாக வானொலியில் பாடினார். அந்தப் பாடலுக்குப் பிறகுதான் டி.கே. பட்டம்மாள் என்ற பெயர் பிரபலமானது. பாரதியின் பாட்டுக்களை பாடுவதற்குப் பயந்த அந்த பிரிட்டிஷ் காலத்திலேயே துணிந்து பாரதியாரின் பாடல்களை மேடைதோறும் பாடிப் பிரபலப்படுத்தினார்.
1962 ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி எனப் பல விருதுகளை வென்றவர்.
கிட்டத்தட்ட 65 ஆண்டுகள் கர்நாடக இசையில் கொடிகட்டிப் பறந்தார். இவரது சம கால கலைஞர்கள் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் எம்.எல். வசந்தகுமாரி ஆவர்.
1947 ஆகஸ்டு 15 அன்று பட்டம்மாளை பாரதியின் பாடல்கள் பாட அகில இந்திய வானொலி அழைத்தது. சுதந்திர இந்தியாவின் முதல் குரலாய் ஒலித்த பட்டம்மாளின் குரலுக்குச் சன்மானம் அளிக்க முன் வந்த போது, நாட்டுக்காகப் பாடுவது கடமை என்று கூறி சன்மானத்தை மறுத்தார் பட்டம்மாள்.
திரைப்படங்களில் பாடினாலும், அவை பக்திப் பாடல்களாகவோ அல்லது தேசியக் கருத்துகள் கொண்ட பாடல்களாகவோ இருந்தாலன்றி பாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். அவர் பாடிய கடைசித் திரைப்பாடல் 'ஹே ராம்' படத்தில் ஒலித்த 'வைஷ்ணவ ஜனதோ' என்பதாகும்.
இந்தியா கடந்து உலகெங்கும் இசை மணம் பரப்பிய டி. கே. பட்டம்மாள் 2009ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி சென்னையில் இறைபதம் சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.