2011-07-14 16:01:37

ஜூலை 15 வாழ்ந்தவர் வழியில்....


கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் நாள் பிறந்தார். இவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் பெற்றோர் சூட்டினார்கள். ஆயினும் தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’என்று ஆனது. இவரின் ஆறாவது வயதில் தந்தை இறந்து விட்டதால் சிறுவயதில் இவரது மாமா துணிக்கடையில் வேலை பார்த்தார். பெ.வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தனது 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரசின் உறுப்பினராக ஆக்கிக் கொண்டார். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தப் போராட்டங்களில் சிறை சென்ற போதுதான் காமராசர் சுயமாகப் படித்துத் தன் கல்வி அறிவை வளர்த்துக் கொண்டார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கிங்மேக்கர், அதாவது அரசரை உருவாக்குபவர் (King Maker), பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது. காமராசர் இறந்த போது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேற எந்தவித சொத்தோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்தார் காமராசர்.
காமராசர் தமிழகத்தின் முதல்வராக ஒன்பது ஆண்டுகள் பதவி வகித்தார். இக்காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் ஒன்பது முக்கிய நீர்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஃணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். அவர் காலத்தில் தமிழகத்தில், பாரத மிகு மின் நிறுவனம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) என பல முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன.
காமராசர் அமைத்த அமைச்சரவையில் சில நுட்பமான விடயங்கள் உள்ளன. மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்) அமைச்சர்கள் இருந்தனர். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம்.பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார். மேலும், இராமசாமி படையாச்சி, மாணிக்கவேலு நாயக்கர் ஆகியோரும் அதில் இருந்தனர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தி.மு.க ஆதரவோடு வென்றவர்கள்.







All the contents on this site are copyrighted ©.