2011-07-12 14:18:18

ஜூலை 13 – வாழ்ந்தவர் வழியில்...


ஆப்ரிக்காவின் நைஜீரியாவில் 1934ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பிறந்தவர் Akinwande Oluwale Soyinka. தன் கவிதைகள், நாடகங்கள் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர் இவர். 1986ம் ஆண்டு இலக்கியத்திற்கான நொபெல் பரிசை இவர் பெற்றார். ஆப்ரிக்காவில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வந்தவர்களில் முதன் முதலாக நொபெல் பரிசைப் பெற்றவர் Soyinka. கருப்பினத்தைச் சார்ந்த ஓரிருவர் இவருக்கு முன் நொபெல் பரிசைப் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் ஆப்ரிக்காவில் பிறந்திருந்தாலும், வேறு நாடுகளின் குடிமக்களாய் மாறியபிறகே இந்தப் பரிசை வென்றுள்ளனர்.
1960களில் நைஜீரியாவில் உள்நாட்டுப் போர் நிலவியபோது, இவர் சிறையில் அடைக்கப்பட்டு, 22 மாதங்கள் துன்புற்றார். சிறையில் இருந்த காலத்தில் இவரால் எழுத முடியவில்லை என்பதே இவர் அனுபவித்தத் துன்பங்களில் மிகக் கொடுமையானது. எழுதுவதில் இவருக்கு இருந்த ஆர்வம், திறமை இவற்றை நன்கு அறிந்திருந்த சிறை அதிகாரிகள், எழுதுவதற்கான எந்த உபகரணத்தையும் இவருக்குத் தரவில்லை. இருந்தாலும் சிறையில் இருந்த காலத்தில் இவர் நாடகம் ஒன்றை (The Lion and the Jewel) வெளியிட்டார் என்று சொல்லப்படுகிறது.
இவர் 1986ம் ஆண்டுக்கான நொபெல் பரிசைப் பெற்றபோது, தனது ஏற்புரையில் தென் ஆப்ரிக்காவில் நிலவிவந்த இனவெறிக் கொள்கையைக் கடுமையாகக் கண்டனம் செய்தார். தென் ஆப்ரிக்காவின் சிறையில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த நெல்சன் மண்டேலாவைப் புகழ்ந்து பேசினார். இவரது உரை பலரைக் கண்ணீரில் நிறைத்ததென்று சொல்லப்படுகிறது.
'கடந்த காலம் நிகழ் காலத்திற்குப் பதில் சொல்ல வேண்டும்' (The Past Must Address Its Present) என்ற தலைப்பில் இவர் வழங்கிய நொபெல் பரிசு உரை பலரையும் விழித்தெழச் செய்தது. இவரது உரை வழங்கப்பட்டு நான்காம் ஆண்டில், 27 ஆண்டு சிறைவாசத்திற்குப் பிறகு, நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.







All the contents on this site are copyrighted ©.