2011-07-12 16:25:41

அனைத்துக் கத்தோலிக்கக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க கர்நூல் மறைமாவட்டம் திட்டம்


ஜூலை12,2011. கர்நூல் மறைமாவட்டத்தின் அனைத்துக் கத்தோலிக்கக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்குவதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு திட்டங்களைத் தீட்டியுள்ளது அம்மறைமாவட்டம்.
தன் மறைமாவட்டத்தின் கல்வி நிறுவனங்களின் 102 தலைவர்களை அண்மையில் சந்தித்து இது குறித்து விவாதித்த ஆயர் அந்தோனி பூலா, பொருளாதார உதவிகள் ஒருவித தற்காலிக நிவாரணத்தையே வழங்க முடிகின்ற வேளை, கல்வியே வேலை வாய்ப்பையும் சமூக அந்தஸ்தையும் தருவதுடன் வருங்கால சமூகம் தளைக்கவும் உதவுகிறது என்றார்.
எந்த ஒரு கத்தோலிக்கக் குழந்தைக்கும் கல்விக்கூடங்களில் அனுமதி மறுக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்திய ஆயர் பூலா, கல்விக்கட்டணச் சலுகைகளையும் ஊக்குவித்தார்.
தங்கள் கிராமங்களில் கல்வி நிலையங்களைக் கொண்டிராத கத்தோலிக்க மாணவர்களுக்கு ஏனைய இடங்களில் தங்கிப் படிப்பதற்கு ஆண்டிற்கு 1000 ரூபாயே வசூலிக்கப்படும் எனவும் மீதியை மறைமாவட்டம் வழங்கும் எனவும் தெரிவித்தார் கர்நூல் ஆயர் பூலா.







All the contents on this site are copyrighted ©.