2011-07-11 17:10:18

வாரம் ஓர் அலசல்- “தென் சூடானின் பிறப்பு விழா”


ஜூலை11,2010. “ந RealAudioMP3 ம்பிக்கையை விடாதே, அதுதான் வெற்றியின் முதல் படிக்கட்டு” என்றார் பேரறிஞர் அண்ணா. இவ்வுலகில் வெற்றியை விரும்பாதவர் எவருமில்லை. ஆனால் அந்த வெற்றி எனும் விதையை அறுவடை செய்வதற்கு தனிநபரும், சமூகமும், நாடும் செயல்படும் விதம்தான் வேறுபடுகின்றது. சிலருக்கு ஆயுதம், வேறு சிலருக்கு அறிவு, இன்னும் சிலருக்குச் சாத்வீகம் என வழிமுறைகள் மாறுபடுகின்றன. வட ஆப்ரிக்காவில் ஒரு நாட்டின் ஒரு பகுதி மக்கள் ஏறக்குறைய 21 வருடங்கள் ஆயுதங்களை ஏந்திப் போராடியதன் பயனாக 2011, ஜூலை9, இச்சனிக்கிழமை நள்ளிரவில் தங்களது சுதந்திரக் கொடியை ஏற்றிக் கொண்டாடினர். ஆப்ரிக்காவில் பெரி்ய நாடாக இருந்த சூடானின் தென் பகுதி, தென் சூடான் குடியரசு என்ற பெயரில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற உலகின் 193வது நாடாகப் பிறந்துள்ளது. ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் 54வது உறுப்பு நாடாகவும் இணைந்துள்ளது. ஆயினும் இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு இந்நாட்டு மக்களில் ஏறக்குறைய இருபது இலட்சம் பேர் உயிரைத் தியாகம் செய்துள்ளனர் மற்றும் சுமார் நாற்பது இலட்சம் பேர் சொந்த வீடுகளை விட்டுக் கட்டாயமாக வெளியேறியுள்ளனர். புசிடன் என்பவர் சொன்னார்:“தியாகத் தழும்பு பெறாமல் நீ வெற்றி பெற முடியாது” என்று. இந்தப் புதிய தென் சூடான் குடியரசின் முதல் சுதந்திரக் கொண்டாட்டங்கள் பற்றித் தொலைபேசி வழி விளக்குகிறார் அருள்தந்தை கலிஸ்டஸ் ஜோசப். கிளேரிசியன் சபையைச் சேர்ந்த இலங்கை அருள்தந்தையான கலிஸ்டஸ் ஜோசப், சூடானில் மூன்றாண்டுகளாக மறைப்பணி செய்து வருகிறார். தென் சூடானுடன் தோழமை என்ற அமைப்புக்குப் பொறுப்பாகவும் இருக்கிறார்.
இந்தப் புதிய தென் சூடான் குடியரசு, பழைய சூடானுடன் 2,100 கிலோ மீட்டர் எல்லைப்புறத்தைக் கொண்டுள்ளது. கென்யா, உகாண்டா, எத்தியோப்பியா, மத்திய ஆப்ரிக்கக் குடியரசு, காங்கோ ஆகிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இப்புதிய நாட்டில் தங்கம், வைரம், ஈயம் போன்ற கனிவளங்கள் அதிகமாக உள்ளன. மேலும், ஆப்ரிக்காவின் சஹாராவையடுத்த பகுதியில் எண்ணெய் வளத்தை அதிகமாகக் கொண்டுள்ள நாடுகளில் மூன்றாவது இடத்தை வகிப்பது சூடான். இந்தச் சூடானிலுள்ள எண்ணெய் வளத்தில் சுமார் 75 விழுக்காடு தென் சூடானில் இருக்கின்றது. எனவே இப்புதிய நாட்டின் எதிர்காலப் பொருளாதார நிலை பற்றியும் அருள்தந்தை கலிஸ்டஸ் ஜோசப் விளக்குகிறார்.
சூடான் நாடு முதலில் எகிப்திலிருந்தும் பின்னர் 1956ம் ஆண்டு ஜனவரி ஒன்றாந்தேதி பிரிட்டனிடமிருந்தும் விடுதலை அடைந்தது. நூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட இந்த எகிப்து மற்றும் பிரித்தானிய காலனி ஆதிக்கங்களின் போதே தென் சூடான் மக்கள் சமத்துவமற்ற கொள்கைகளினால் பாதிக்கப்பட்டனர். எனவே 1962 முதல் 1972 வரை முதல் தென் சூடான் புரட்சிப் போர் நடந்தது. சூடானின் வட பகுதி அராபிய இசுலாமியரையும் தென் பகுதி கிறிஸ்தவர் மற்றும் பூர்வீக மதத்தவரையும் அதிகமாகக் கொண்டிருக்கின்றன. தென் சூடான் மக்கள் தொடர்ந்து பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் சூடான் மக்கள் விடுதலைப் படை மீண்டும் 1983ல் வன்முறையில் இறங்கியது. 2005ல் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டின் மூலம் இப்போர் முடிவுக்கு வந்தது. இந்த உடன்பாட்டின்படி 2011, ஜனவரி 9ம் தேதி பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 99 விழுக்காட்டினர் தென் சூடான் தனிநாடு கேட்டு ஓட்டளித்தனர். இந்த ஜூலை 9ம் தேதி தென் சூடான் தனி நாடாகியுள்ளது.
இந்தப் புதிய நாட்டில் 200க்கும் மேற்பட்ட இனச் சமூகங்கள் இருக்கின்றன. சுமார் 17 விழுக்காட்டினரே எழுத்தறிவு பெற்றவர்கள். சுமார் 70 விழுக்காட்டினருக்கு அடிப்படை நலவாழ்வு வசதிகள் இல்லை. இந்நிலையில் ஐ.நா. நிறுவனம், தனது ஏழாயிரம் அமைதிகாப்புப் படை வீரர்களை அமர்த்தி அந்நாட்டிற்கு உதவி செய்து வருகிறது. இவ்விழாவில் கலந்து கொண்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூனும், அந்நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு உதவி செய்வதாக உறுதி கூறியுள்ளார். மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள இப்புதிய தென் சூடான் வளம் பெற வாழ்த்துவோம். புரூம் என்பவர் சொல்லியிருப்பது போல, நல்ல செயல்களில் துணிவுடைய தென் சூடானியர்கள் நாள்தோறும் வெற்றி காண்பார்களாக. நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் அன்பர்களே, உங்களுக்கும் வெற்றி என்னும் அறுவடை என்றும் சிறப்பாக இருக்கும்.








All the contents on this site are copyrighted ©.