2011-07-09 15:51:46

தனிநாடாக உருவாகும் தென் சூடானியருக்குத் திருப்பீடப் பேச்சாளர் வாழ்த்து


ஜூலை09,2011. சூடானில் ஒவ்வொரு சமூகத்தின் தனிப்பட்ட பண்புகளுக்குத் தகுந்த மதிப்பளிக்கும் மற்றும் முரண்பாடுகளையும் போராட்டங்களையும் மேற்கொள்ள உதவும் ஓர் அரசியலமைப்பைக் கண்டு கொள்வதில் அம்மக்கள் வெற்றியடைவார்களாக என்று வாழ்த்தினார் திருப்பீடப் பேச்சாளர் அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி.
ஜூலை 09, இச்சனிக்கிழமை நள்ளிரவில் தென் சூடான், தனி நாடாக அதிகாரப்பூர்வமாக உருவாகியுள்ள கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளதையொட்டி ஒக்டாவா தியெஸ் (Octava Dies) என்ற வத்திக்கான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அருட்தந்தை லொம்பார்தி, இவ்வாறு கூறினார்.
சூடானில், குறிப்பாக, தென் சூடானில் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்ற உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்த மற்றும் கட்டாயமாக வீடுகளைவிட்டு வெளியேறியிருக்கின்ற இலட்சக்கணக்கான அப்பாவி மக்களின் துன்பங்களையும் செபங்களையும் இந்த நேரத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது என்று கூறிய அருட்தந்தை லொம்பார்தி, அம்மக்களுடனானத் தமது ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார்.
ஆப்ரிக்காவில் தற்போது திசைமாறி வீசிக் கொண்டிருக்கும் காற்று, அக்கண்டத்தில் மனித உரிமைகளையும் மனித மாண்பையும் உண்மையாகவே மதிக்கும் புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகள் உருவாக வழி அமைக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்நாடு, உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது மற்றும் உள்நாட்டில் ஒன்றிப்பை ஏற்படுத்துவதற்குக் கடும் பிரச்சனைகளையும் எதிர்நோக்குகின்றது, எனினும், அம்மக்கள் எதிர்பார்க்கும் சுதந்திரமும் அமைதியும் நிறைந்த எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க உலக சமுதாயத்தால் இயலும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
புதிய தென் சூடான் நாட்டில் இடம் பெற்று வரும் சுதந்திர தின நிகழ்வுகளில் திருப்பீடப் பிரதிநிதிகள் குழு, ஐ.நா.பொதுச் செயலர், சூடான் அரசுத்தலைவர், அமெரிக்க ஐக்கிய நாடு, ஐரோப்பிய சமுதாய அவை, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
2005ம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய நாடாக உருவாகியுள்ள தென் சூடான், உலகில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 193 வது நாடாக அமைந்துள்ளது மற்றும் இது ஆப்ரிக்காவில் ஐ.நா.வின் 54 வது உறுப்பு நாடாகவும் மாறியுள்ளது.
சூடான் உள்நாட்டுப் போரில் சுமார் இருபது இலட்சம் பேர் இறந்தனர் மற்றும் சுமார் நாற்பது இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.







All the contents on this site are copyrighted ©.