2011-07-09 16:05:37

ஞாயிறு சிந்தனை ஆண்டின் 15ம் ஞாயிறு


RealAudioMP3 எனது மிக நெருங்கிய இயேசுசபை நண்பர் ஒருவர் வீட்டில் அவரோடு சேர்ந்து 5 ஆண் குழந்தைகள். 5 பேர் என்பதால் அவர்கள் குடும்பத்தை பாண்டவர் குடும்பம் என்று அந்த கிராமத்தில் அழைப்பார்கள். அவரது அப்பா, அம்மா இருவரும் தங்கமானவர்கள். ஊர் காரியம் தொடங்கி, பங்கு, தெரு என எங்கும் நல்லதை விரும்பும் அருமையான உள்ளம் கொண்டவர்கள். எனது இயேசு சபை நண்பர்தான் வீட்டில் கடைசி. எனவே, அதிகச் செல்லம். மூத்த அண்ணன் அப்பாவைப் போல் நிறத்திலும் குணத்திலும். மிகத் தங்கமானவர். ஆசிரியர் பணி அதே ஊரில் செய்ததால் எல்லாரும் 'ஒரு மூத்த பிள்ளை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்' என்று சொல்லக்கூடிய அளவிற்கு அற்புதமானவர்.
இரண்டாமவர் அம்மாவைப் போல், நிறத்தில் மட்டும். குணத்தில் அல்ல. பயங்கரக் குடி. எப்போதும் தீய நண்பர்களோடு கூடி வீட்டிற்கு வருவதே கிடையாது. வந்தால் பணத்திற்காக மட்டுமே. ஊர் மூத்த அண்ணனைப் பார்த்து பெருமைப் பட்டது என்றால், வேலை வெட்டியில்லாமல் குடியில் அலையும் இரண்டாமவரைப் பார்த்து மிகுந்த வருத்தப்பட்டது. மூன்றாமவர் பயங்கர அறிவாளி. அந்த ஊரிலேயே முதன்முதலாக சென்னை இலயோலா கல்லூரி சென்று படித்து, பின்பு அக்கல்லூரியிலேயே பேராசிரியாராகப் பணி செய்பவர். இப்பொழுதும் ஊருக்கு வந்தால், ஊரே இவரது அறிவுக்கூர்மையைப் பார்த்து வாயில் விரல் வைப்பது உண்மை. இவர் ஒரு விதத்தில் அப்பாவைப் போல அறிவிலும், அம்மாவைப் போல நிறத்திலும்.
நான்காமவர் நல்லவர். நன்கு படித்தும் வேலை கிடைக்காமல், ஊரில் நற்பணி மன்றம் வழியாக நல்லது செய்ய முயல்பவர். அம்மாவைப் போல கரிசனையான, அன்பான மனது அவருக்கு. ஊரில் நல்லது கேட்டது எதுவென்றாலும் இவரது அறிவுரை, பண உதவி இல்லாமல் நடக்காது. ஐந்தாமவர் இயேசு சபை துறவி. மிகத் தங்கமானவர். பொறுப்பானவர். அன்பிலும், கரிசனையிலும் அவரது அம்மாவைப் போல. நற்குணம் படைத்த, புனித வாழ்வு வாழும் இந்த அருமையான அப்பா, அம்மாவிற்குப் பிறந்தவர்களைப் பாருங்கள். ஒருவர் சொக்கத் தங்கமானவர், மற்றவர் மிக மோசமானவர், இன்னொருவர் மிகச் சிறந்த அறிவாளி, நான்காமவர் நல்ல சமூகச் சேவகர். கடைசி மகன், துறவி, மிகக் கெட்டிக்காரர். ஏன் இந்த மாற்றம்? ஏன் இந்த வேறுபாடு?
இன்றைய மத்தேயு நற்செய்தி 13 : 23ல் இயேசு 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பலன் அளிப்பார்' என்கிறார்.
உள இயலில் பல குழுக்கள் உள்ளன. ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் ஒரு மனிதன் நல்லவனாக இருப்பதும், கெட்டவனாக இருப்பதும் பிறப்பிலேயே அவன் உடலில் உள்ள குரோமோசோம்களில் குறிக்கப்பட்டிருப்பதாகவும், அந்தந்த வயதிற்கு ஏற்ப அவன் நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாறுவதாக கூறுகின்றனர். இவர்கள் School of Nature Psychology. மற்றொரு குழுவினர் மனிதர்கள் அனைவரும் நல்லவராகவே பிறக்கின்றனர்; ஆனால், நல்லவர்களாக வாழ்வதும், கெட்டவர்களாக வாழ்வதும் அவர்கள் வளரும் சூழலைப் பொறுத்தே அமைகின்றது என்கின்றனர். இவர்கள் School of Nurture Psychology. இன்றைய நற்செய்தியில் விதைப்பவர் உவமை வழியாக இயேசு நமக்குப் புதிய தெளிவுகளைத் தருகிறார்.
விதைப்பவர் விதைக்கச் செல்கிறார். விதையில் குறையில்லை. ஆனால், விதைகளின் தரத்தில் மாறுபாடு இருக்கலாம். இந்த விதைகள் விழும் சூழலுக்கு ஏற்ப பலன் தர முயற்சி செய்கின்றன. வழியோரம் விழுந்த விதைகள் நல்லதாகவோ, கேட்டதாகவோ இருப்பினும் முளைத்து, வளர்ந்து பலன் தராமல், பறவைகளுக்கு இரையாகிப் போகின்றன. எனவே, அவை எவ்விதத்திலும் விதைக்கான பலனைத் தரவில்லை. மிக மோசமான சூழலில் பயனற்று, தொடக்கத்திலேயே முடிவைச் சந்திக்கும் வாழ்வை இயேசு குறிப்பிடுகிறார்.
பாறை நிலத்தில் விழுந்த விதைகளோ நல்ல மண் இல்லாததால், முளைத்த வேகத்தில் காய்ந்து மடிந்து போகின்றன. எதிர்வினைச் சூழலில் நல்முயற்சி இருப்பினும், பயனற்று அழிந்து போகும் வாழ்வை இயேசு குறிப்பிடுகிறார். முட்செடிகள் நடுவில் விழுந்த நல் விதைகள் வளர்ந்து பலன் தர ஆசைப்பட்டாலும், கூடவே வளரும் முட்செடிகள் அதை வீணாசையாக மாற்றி விடுகின்றன. சுயநலச் சூழலில் வாழும் சமூகத்தில் நன்மை பல சமயம் சாகடிக்கப்படுவதை இயேசு மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகிறார். முடிவாக, நல்ல நிலத்தில் விழுந்த விதைகள். எல்லாம் நூறு மடங்கு பலன் தரவில்லை. அந்தந்த விதையின் தரத்திற்கேற்ப மாறுபடுகிறது.
மிகச் சிறந்த உளவியலாளராக, மனிதரின் இயல்பையும், அவர்கள் வாழும் சூழலையும் இணைத்து, இரு நிலைகளும் ஒவ்வொரு மனிதரையும் வித்தியாசப்படுத்துவதை இயேசு தெளிவுபடுத்துகிறார். எசாயா நூல் 6 : 9-10 கூறுவதைப் போல "இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப் போய்விட்டது. காதும் மந்தமாகிவிட்டது. இவர்கள் தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கிறார்கள்" என்று குறைபடுகிறார். ஆனால், கிறிஸ்தவர்களாகிய நாமோ மனித இயல்பளவிலும் (Nature) நல்ல கிறிஸ்தவ வாழ்க்கைச் சூழலிலும் (Nurture) வாழும் வரம் பெற்றிருக்கிறோம். "உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்று இன்றைய நற்செய்தியில் (மத்தேயு 13 : 16-17 ) இயேசு நம் எல்லாரையும் நம் நிலையிலே அர்ச்சிக்கிறார். இன்னும் அதிகமாக நல்ல பலன் தர நம் நிலையில் இருந்துகொண்டே முயற்சி செய்யலாமே!







All the contents on this site are copyrighted ©.