2011-07-09 15:55:44

கிரீஸின் பொருளாதார நெருக்கடியால் கத்தோலிக்கத் திருச்சபையின் சமூகநலத் திட்டங்கள் நிறுத்தப்படும் அபாயம்


ஜூலை09,2011. கிரீஸ் நாடு தற்போது எதிர்நோக்கும் கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபை தனது உயிரூட்டமானப் பிறரன்பு மற்றும் சமூகநலத் திட்டங்களைக் கட்டாயமாக நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதாக ஏத்தென்ஸ் கத்தோலிக்கப் பேராயர் நிக்கோலாஸ் ஃபோஸ்கோலோஸ் அறிவித்தார்.
கிரீஸ் நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடி அந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமானதாக இருக்கின்றது என்று பேராயர் ஃபோஸ்கோலோஸ் சி.என்.எஸ்.கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
நாட்டில் எல்லா இடங்களிலும், குறிப்பாக அரசியல்வாதிகள் மத்தியில் ஊழல் மலிந்து விட்டது, திருச்சபைக்கு எங்கிருந்தும் உதவி கிடையாது, எனவே தனது நற்பணிகளை நிறுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது என்றார் அவர்.
இதற்கிடையே, கிரீஸ் நாட்டின் 48,500 கோடி டாலர் வெளிநாட்டுக் கடனில் கொஞ்சத்தைக் கட்டுவதற்கென அவசரகாலக் கடனாக 15,600 கோடி டாலரை வழங்க சர்வதேச நிதியகமும் ஐரோப்பிய சமுதாய அவையும் இசைவு தெரிவித்துள்ளன.








All the contents on this site are copyrighted ©.