2011-07-09 15:57:28

உலக மக்கள்தொகை தினம்-ஐ.நா.பொதுச் செயலரின் செய்தி


ஜூலை09,2011. இப்புவியானது எழுநூறு கோடி மக்களைக் கொண்டிருக்கும் நாளை விரைவில் நாம் காணவிருக்கும்வேளை நமது கவனம் எல்லாம் எப்பொழுதும் மக்களைப் பற்றியதாகவே இருக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்தினார்.
ஜூலை 11, இத்திங்களன்று கடைபிடிக்கப்படும் உலக மக்கள்தொகை தினத்திற்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர், நல்லதோர் உலகை உருவாக்க “ஏழு பில்லியன் திட்டங்கள்” என்று, உலக மக்கள் தொகைக்கு ஏற்ப, ஐ.நா.மக்கள்தொகை நிதி அமைப்பு எடுத்துள்ளது பாராட்டுக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமூகப்பணிகள் மற்றும் மாற்றத்திற்கான வேலைகளில் தனிப்பட்ட நபர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகில் ஒரு வித்தியாசத்தைக் காண முடியும் என்ற பான் கி மூன், மக்களின் பெருமளவான சக்தி ஒன்று திரண்டதன் மூலமாக, துன்பம் நிறைப் பாகுபாடுகளை எதிர்நோக்கியவர்கள் நம்பிக்கையைப் பெற்றதற்கு இவ்வாண்டில் பல எடுத்துக்காட்டுகளைக் காண முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் போதுமான உணவை நாம் கொண்டிருந்தாலும் இன்னும் சுமார் நூறு கோடிப் பேர் பசியால் வாடுகின்றனர், பல நோய்களை ஒழிக்க நம்மிடம் வழிகள் இருந்தும் இன்னும் அந்நோய்கள் பரவுகின்றன என்றும் அவரின் செய்தி கூறுகிறது.
இந்தப் புவியின் எழுநூறாவது வாசிக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க இந்த உலக தினத்தில் தீர்மானிப்போம் என்றும் அவரின் செய்தி அழைப்பு விடுக்கிறது.







All the contents on this site are copyrighted ©.