2011-07-08 16:23:55

பழைய மற்றும் புதிய சூடான் நாடுகள் சமய வாரியாக ஒன்றாகவே இருக்கும் - கார்ட்டூம் கர்தினால்


ஜூலை08,2011. சூடான் நாடு அரசியல் ரீதியாக இரண்டாகப் பிரிந்தாலும் சமய வாரியாக இரண்டு நாடுகளும் ஒன்றாகவே இருக்கும் என்று சூடான் கர்தினால் Gabriel Zubeir Wako தெரிவித்தார்.
இவ்வாரத்தில் நடந்து முடிந்த மேற்கு ஆப்ரிக்க ஆயர்கள் கூட்டத்தில் இவ்வாறு கூறினார் கார்ட்டூம் கர்தினால் Wako.
இன்னும், இக்கூட்டத்தில் பேசிய தென் சூடான் ஆயர் ருடோல்ப் டெங் மஜாக், தென் சூடான் தனி நாடாகப் பிரிவது, தனது வாழ்நாளில் நடக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயம் என்றும், ஆப்ரிக்காவிலும் வேறு கண்டங்களிலும் வாழும் திருச்சபை சூடானியர்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும், WCC என்ற உலக கிறிஸ்தவ சபைகள் அவையும் தென் சூடானுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைதிகாப்புப் பணியின் ஏழாயிரம் இராணுவத்தினரும் 900 சர்வதேச அளவிலான காவல்துறைப் பணியாளரும் தென் சூடானில் இருந்து அந்நாட்டின் அமைதி மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவுவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும், தென் சூடான் சுதந்திர விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருக்கும் சர்வதேச காரித்தாஸ் பொதுச் செயலர் மைக்கிள் ராய் பேசுகையில், இந்த நாள் அம்மக்களுக்கு நம்பிக்கையின் நேரமாக இருக்கின்றது என்றார்.
இந்தச் சுதந்திரத்திற்காக இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருப்பதையும், இன்னும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டுக் கட்டாயமாக வெளியேறியிருப்பதையும் ராய் நினைவுகூர்ந்தார்.







All the contents on this site are copyrighted ©.