2011-07-08 16:21:19

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் காஸ்தெல் கண்டோல்போவில் விடுமுறையைத் தொடங்கியுள்ளார்


ஜூலை08,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செபித்தல், வாசித்தல், புத்தகங்கள் எழுதுதல் ஆகியவற்றில் தனது கோடை விடுமுறையைச் செலவழிக்கத் திட்டமிட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லம் அமைந்திருக்கும் காஸ்தெல் கண்டோல்போவுக்கு இவ்வியாழன் உள்ளூர் நேரம் மாலை 5.50 மணிக்குச் சென்ற திருத்தந்தை, அங்கு கூடியிருந்த மக்களிடம், மலைகளும் ஏரியும் கடலும், அழகான ஆலயமும் நல்ல மக்களும் நிறைந்த இவ்விடத்தில் விடுமுறை நாட்களைச் செலவிட வந்திருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.
இறைவன் நல்ல விடுமுறை நாட்களைத் தருவாராக என்றும் என்று அம்மக்களிடம் தெரிவித்தார் திருத்தந்தை.
திருத்தந்தையின் இவ்விடுமுறை குறித்து நிருபர்களிடம் பேசிய திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி, திருத்தந்தை ஓய்வெடுப்பதற்குச் சிறந்த வழியாக, அவர் தனக்கு மிகவும் பிடித்த இறையியல் மற்றும் திருமறைநூல்கள் பற்றி வாசிப்பதையும் எழுதுவதையுமே கொண்டுள்ளார் என்று கூறினார்.
நாசரேத்தூர் இயேசு பற்றிய திருத்தந்தையின் இரண்டு நூல்களின் தொடர்ச்சியாக, இயேசுவின் குழந்தைப்பருவம் பற்றி இவ்விடுமுறை நாட்களில் அவர் எழுதுவார் என்றும் அருட்தந்தை லொம்பார்தி கூறினார்.
காஸ்தெல் கண்டோல்போ, உரோமைக்குத் தென் கிழக்கே 15 மைல் தூரத்தில் அல்பானோ ஏரியை நோக்கிய குன்றின் மேலுள்ள அழகிய ஊராகும்.
வருகிற செப்டம்பர் வரை காஸ்தெல் கண்டோல்போவில் இருக்கும் திருத்தந்தை, ஆகஸ்டில் (18-21) மத்ரித்திற்கும் செப்டம்பரில் (22-25) ஜெர்மனிக்கும் செல்வார்.







All the contents on this site are copyrighted ©.