2011-07-08 16:29:24

காஷ்மீர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தர 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு


ஜூலை08,2011. காஷ்மீரில் தீவிரவாதத்தின் பக்கம் இளைஞர்கள் சென்று விடாமல் தடுக்க அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும், அதற்காக இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்காக காஷ்மீருக்கு சிறப்பு தொழில் நிதியுதவியாக 1,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இவ்வியாழனன்று இதற்கு ஒப்புதல் அளித்தது.
தேசிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் சேர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். இளைஞர்களுக்கான பயணம் மற்றும் பராமரிப்புச் செலவு, தங்கும் செலவு ஆகியவற்றை மத்திய அரசு ஏற்கும். ஆரம்பத்தில் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களுக்கான உதவித் தொகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏற்கும்.
அந்நிறுவனத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டால் உதவித் தொகையில் 50 விழுக்காடு திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.