2011-07-07 15:34:44

கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பு : இந்திய மகளிர் ஆணைக்குழு தலைவர் கவலை


ஜூலை 07, 2011. "இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன, குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தில் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன,'' என்று தேசிய மகளிர் ஆணைக்குழு தலைவர் யாஸ்மின் அப்ரார் கவலை வெளியிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்திலும், டில்லியிலும் அண்மை நாட்களாக கற்பழிப்பு குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என்ற அவர், கேரள மாநிலத்தில் சிறுமி ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தியதில் அரசியல்வாதிகள் முதல், காவல்துறை அதிகாரிகள் வரை சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தில், பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது என்று உத்தரப்பிரதேச அரசு கூறுகின்ற போதிலும், உத்தரபிரதேச மாநிலத்தில்தான் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. குற்றங்களின் எண்ணிக்கை, இங்கு மோசம் என்ற நிலையிலிருந்து, மிக மோசம் என்ற நிலைக்குச் சென்றுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.
பெண்களின் பாதுகாப்புக்கு என தேசிய மகளிர் ஆணைக்குழு ஏற்படுத்தியுள்ள தேசிய கண்காணிப்புக் குழு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கு பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து அறிந்து, அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவனத்தில் கொண்டு செயல்படும் எனத் தேசிய மகளிர் ஆணைக்குழு தலைவர் யாஸ்மின் அப்ரார் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.