2011-07-06 15:49:19

ஜிம்பாபுவேயில் அருட்பணியாளர்கள் தாக்கப்படக்கூடும், திருச்சபையின் நீதி அவை கவலை


ஜூலை06,2011. ஜிம்பாபுவே தலைநகர் ஹராரேயில் இடம் பெறும் அரசியல் நோக்குடைய பூசல்கள் நிறுத்தப்படுவதற்கு அரசியல் தலைவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டுக் கத்தோலிக்கத் திருச்சபையின் நீதி மற்றும் அமைதி அவை அண்மையில் அறிக்கை வெளியிட்டதையடுத்து அருட்பணியாளர்கள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார் அவ்வவை இயக்குனர் அலாய் ஷாம்பும்பா.
ஆப்ரிக்க நாடான ஜிம்பாபுவேயின் அரசியல் சகிப்பற்றதன்மைக்கு எதிராக அந்நாட்டு ஆயர்கள் இவ்வாண்டின் தொடக்கத்தில் வெளிப்படையாய்ப் பேசியதற்குப் பின்னர் ஆயர்களும் அருட்பணியாளர்களும் குறிவைக்கப்பட்டனர், அதே நிலைமை தற்போதும் ஏற்படலாம் என்று ஷாம்பும்பா, அமெரிக்கக் கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
சனநாயக உரிமைகளை எதிர்க்கும் அரசியல் ஆதரவுடைய குழுக்கள் நடத்தும் மோதல்களில் சிக்கிவிடுவதைத் தவிர்க்கும் நோக்கத்தில், சில ஆண்கள் தங்கள் குடும்பங்களுக்கு இரவு நேரங்களில் இரகசியமாகச் செல்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
ஜிம்பாபுவேயில் பதிவு செய்யப்பட்ட சுமார் 55 இலட்சம் வாக்காளர்களில் ஏறக்குறைய 27 விழுக்காட்டினர் இறந்து விட்டனர் எனவும், இன்னும் பலர் வாக்களிப்பதற்கான வயது வரம்புக்குக் குறைவானவர்கள் எனவும், பலர் தங்கள் பெயர்களை ஒரு மாவட்டத்திற்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.







All the contents on this site are copyrighted ©.